காதலிக்க மறுத்த இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு


காதலிக்க மறுத்த இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 29 Jun 2019 4:00 AM IST (Updated: 29 Jun 2019 5:05 AM IST)
t-max-icont-min-icon

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கோவை,

கோவையை அடுத்த கணுவாய் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகன் மோகன்பிரகாஷ் (வயது 23). இவர் அதே பகுதியை சேர்ந்த 22 வயதான இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார். அவர், அந்த இளம்பெண்ணை காதலிப்பதாக அடிக்கடி கூறி வந்தார். ஆனால் அவருடைய காதலை ஏற்க இளம்பெண் மறுத்து விட்டார்.

இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந் தேதி இரவு 8 மணியளவில் அந்த இளம்பெண் கணுவாய் அருகே நடந்து சென்றார். அப்போது அவரை தடுத்து நிறுத்தி பேசிய மோகன் பிரகாஷ், தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினார். ஆனால் அவர் எதுவும் பேசாமல் அங்கிருந்து செல்ல முயன்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர், தனக்கு கிடைக்காதவர் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று கூறி மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அந்த இளம்பெண்ணை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த மோகன் பிரகாசை கைது செய்தனர். பின்னர் அவர் மீது கோவை தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட மோகன்பிரகாசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி ரவி தீர்ப்பளித்தார். இதையடுத்து போலீசார் மோகன் பிரகாசை பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராமானுஜம் ஆஜரானார்.

Next Story