தண்ணீர் இருந்தும் மின்சாரம் இல்லாததால், ஆதனூர் கிராமத்தில் கருகி வரும் பயிர்கள் - விவசாயிகள் வேதனை


தண்ணீர் இருந்தும் மின்சாரம் இல்லாததால், ஆதனூர் கிராமத்தில் கருகி வரும் பயிர்கள் - விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 29 Jun 2019 4:15 AM IST (Updated: 29 Jun 2019 5:26 AM IST)
t-max-icont-min-icon

ஆதனூர் கிராமத்தில் தண்ணீர் இருந்தும் மின்சாரம் இல்லாததால் பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மானாமதுரை, 

மானாமதுரை அருகே வைகை ஆற்றை ஒட்டி ஆதனூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் வாழை, கரும்பு, நெல், தென்னை, வெள்ளரி உள்ளிட்டவைகள் பயிர் செய்யப்பட்டுள்ளன.

இந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூலம் விவசாயம் நடைபெற்று வருகிறது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட நாற்று நடவு செய்துள்ளனர். இந்த ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வசதி நன்கு உள்ளது. இந்தநிலையில் கடந்த ஒரு மாத்திற்கு முன்பு விவசாயத்திற்காக மின் வினியோகம் செய்யும் டிரான்ஸ்பார்மர் பலத்த காற்று வீசியதில் பழுதானது.

இதுகுறித்து மானாமதுரை புறநகர் மின்வாரியத்திடம் விவசாயிகள் புகார் செய்தனர். ஆனால் இதுவரை மின்வாரியம் டிரான்ஸ்பார்மரை சரி செய்யாமல் அலைக்கழித்து வருகின்றனர். இதனால் நாற்றங்காலிலேயே நெல் பயிர்கள் கருகி விட்டன. தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதுடன் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் நன்கு இருந்தும் மின்சாரம் இல்லாததால் மோட்டார்களை இயக்க முடியாமல் விவசாயிகள் வேதனையுடன் பரிதவித்து வருகின்றனர். கடும் வெயில் காரணமாக தண்ணீர் இல்லாததால் வாழைகள் வாடி வருகின்றன. இதுபற்றி விவசாயிகள் நேரில் சென்று அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் விவசாயிகள் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ.விடம் இதுபற்றி கூறியதை தொடர்ந்து, அவர் மின்வாரிய அதிகாரிகளிடம் கூறிய போது, புதிதாக டிரான்ஸ்பார்மர் வந்தால் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினராம்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், புதிய மின்சார டிரான்ஸ்பார்மர் பொருத்த பணம் வசூல் செய்து வருமாறு அதிகாரிகள் கூறுகின்றனர். தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி வருவது வேதனை அளிக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் டிரான்ஸ்பார்மர் பழுதை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுபற்றி மின்வாரிய பொறியாளர் ஜெயபாண்டியம்மாளிடம் கேட்டபோது, வீடுகளுக்கு வினியோகம் செய்யும் மின்சார டிரான்ஸ்பார்மர் நன்கு இயங்கி வருகிறது. ஆனால் விவசாயத்திற்கு வினியோகிக்கப்படும் டிரான்ஸ்பார்மர் பழுதானதால், அதை புதிதாக மாற்ற வேண்டியுள்ளது. தற்போது மின்சார டிரான்ஸ்பார்மர் பற்றாக்குறையாக இருப்பதால், புதிதாக டிரான்ஸ்பார்மர் வந்தால் தான் அமைக்க முடியும் என்றார். 

Next Story