அஞ்செட்டி அருகே மரத்தடியில் வீசப்பட்ட 27 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்


அஞ்செட்டி அருகே மரத்தடியில் வீசப்பட்ட 27 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 1 July 2019 3:45 AM IST (Updated: 1 July 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

அஞ்செட்டி அருகே மரத்தடியில் வீசப்பட்ட 27 நாட்டுத்துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட மலை கிராமங்களில் உரிமம் பெறாமல் பலரும் நாட்டுத்துப்பாக்கிகள் வைத்துள்ளனர். வன விலங்குகளை வேட்டையாடவும், வன விலங்குகளிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ளவும் அவர்கள் துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது. உரிமம் இன்றி துப்பாக்கிகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்று போலீசார் அவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவின் பேரில், மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், அஞ்செட்டி போலீசார் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்கு சென்று நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு அறிவுறுத்தினர். இதனால் பலரும் நாட்டுத்துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அஞ்செட்டி அருகே ஒகேனக்கல் செல்லும் சாலையில் உள்ள பூமரத்து குழி என்ற கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஆலமரத்தடியில் உரிமம் இல்லாமல் பயன்படுத்தி வந்த 27 நாட்டுத்துப்பாக்கிகளை கிராம மக்கள் நேற்று வீசி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அஞ்செட்டி போலீசார் அங்கு சென்று 27 நாட்டுத்துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.

கடந்த 21-ந் தேதி தேன் கனிக்கோட்டை அருகே ஏணிபெண்டா கிராமத்தில் 3 நாட்டுத்துப்பாக்கிகளும், வீரிசெட்டி ஏரி கிராமத்தில் 7 துப்பாக்கிகளும், ஏணிமுச்சந்திரம் கிராமத்தில் 9 நாட்டுத்துப்பாக்கிகளும் என மொத்தம் 19 துப்பாக்கிகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல அஞ்செட்டி அருகே நேற்று 27 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேன்கனிக்கோட்டை சுற்று வட்டாரத்தில் இதுவரை 46 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story