வாலிபருக்கு போதை ஊசி ஏற்றிய பெண் போலீசின் மகன் உள்பட 3 பேர் கைது


வாலிபருக்கு போதை ஊசி ஏற்றிய பெண் போலீசின் மகன் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jun 2019 10:15 PM GMT (Updated: 30 Jun 2019 7:11 PM GMT)

திருச்சியில் வாலிபருக்கு போதை ஊசி ஏற்றிய பெண் போலீசின் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி மாநகரில் வாலிபர்கள் போதை ஊசிக்கு அடிமையாகி வருவது அதிகரித்து வருகிறது. மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து அதனை சுத்திகரித்து ஊசி மூலம் உடலில் செலுத்தி அதில் கிடைக்கும் போதையை அனுபவிக்க தொடங்கி உள்ளனர். இந்த போதை ஊசிக்கு அடிமையானால் உடலில் பெரும் தீங்கு ஏற்படும்.

இந்தநிலையில் திருச்சி அரியமங்கலம் பகுதியில் வாலிபர் ஒருவருக்கு நண்பர்கள் சேர்ந்து போதை ஊசி ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி காட்டூர் குறிஞ்சி நகரை சேர்ந்த முருகேசனின் மகன் சூர்யா (வயது 20), திருவெறும்பூர் போலீஸ் குடியிருப்பை சேர்ந்த செல்வராஜின் மகன் தினகரன் (21), மஞ்சதிடலை சேர்ந்த சூரியர் (19), தெற்கு காட்டூரை சேர்ந்த போஸ் என்கிற தினேஷ்குமார் (20) ஆகிய 4 பேரும் நண்பர்கள் ஆவார்கள். இவர்களில் தினகரன், சூரியர், தினேஷ்குமார் ஆகிய 3 பேரும் போதை ஊசி பழக்கத்திற்கு அடிமையானவர்கள்.

சம்பவத்தன்று இவர்கள் சூர்யாவுக்கும் போதை ஊசியை ஏற்றியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதுபற்றி அவருடைய பெற்றோர் விசாரித்த போது, நண்பர்கள் போதை ஊசியை ஏற்றியது குறித்து கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், சூர்யாவை அரியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தரசு வழக்குப்பதிவு செய்து, தினகரன், சூரியர், தினேஷ்குமார் ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இவர்கள் புதுச்சேரியில் இருந்து உடல் வலி தீர்வுக்கான மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து, அவற்றை தண்ணீரில் கரைத்து சுத்தப்படுத்தி, அதன்பின் அதை ஊசி மூலம் கைகளில் நரம்புகளில் செலுத்தி போதை ஏற்றிக்கொண்டது தெரியவந்தது. மேலும் அந்த மாத்திரைகளையும், போதை ஊசியையும் இவர்கள் 3 பேரும் திருச்சி மாநகரில் உள்ள மேலும் பல வாலிபர்களுக்கு விற்று வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தினகரன், சூரியர், தினேஷ்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 260 மாத்திரைகளையும், ஊசிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் கைதான தினகரன் பெண் போலீஸ் ஒருவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

Next Story