பொங்கலூர் அருகே மொபட் மீது கார் மோதல்; மாணவன் பலி 2 பேர் படுகாயம்


பொங்கலூர் அருகே மொபட் மீது கார் மோதல்; மாணவன் பலி 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 1 July 2019 4:15 AM IST (Updated: 1 July 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

பொங்லூர் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பலியானான். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பொங்கலூர்,

பொங்கலூர் அருகே உள்ள வலையபாளைத்தை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது53). கூலித்தொழிலாளி. இவர் நேற்று அதே ஊரைச்சேர்ந்த காளியப்பன்(60) மற்றும் தனது மகள் வழிப்பேரன் யுவராஜ்(11) ஆகியோருடன் ஒரு மொபட்டில் மாலை 6.30 மணியளவில் கொடுவாய் சென்றார்.

பின்னர் அதே மொபட்டில் 3 பேரும் காட்டூர்புதூர் வழியாக வலையபாளையம் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது எதிரே அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக இவர்கள் வந்த மொபட் மீது மோதியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே யுவராஜ் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீசார் விபத்தில் இறந்து போன யுவராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த கருப்பசாமி மற்றும் காளியப்பன் ஆகியோரை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான யுவராஜ் வலையபாளையம் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த விபத்து குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story