வீரபாண்டி அருகே விபத்து, கேரள தொழிலதிபர் பலி, 6 பேர் படுகாயம் - கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


வீரபாண்டி அருகே விபத்து, கேரள தொழிலதிபர் பலி, 6 பேர் படுகாயம் - கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 July 2019 4:15 AM IST (Updated: 1 July 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி அருகே தென்னைமரத்தில் மோதி கார் விபத்துக்குள்ளானதில் கேரள தொழிலதிபர் பலியானார். 6 பேர் படுகாயம் அடைந்தனர். கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உப்புக்கோட்டை,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜாக்காடு பகுதியை சேர்ந்தவர் டோனி ஓமனகுட்டன் (வயது 45). தொழிலதிபர். இவர், மருத்துவம் பார்ப்பதற்காக போடிமெட்டு வழியாக கம்பத்துக்கு தனது குடும்பத்துடன் காரில் வந்து கொண்டிருந்தார். அவருடைய உறவினர் ஜெமினி (53) காரை ஓட்டினார்.

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் நின்ற தென்னை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த டோனி ஓமனகுட்டன் காருக் குள்ளேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

மேலும் காரில் வந்த டோனி ஓமனகுட்டனின் மனைவி ஜெயம்மா (43), மகள் திரிதத்தனா (14), மகன் நந்தகோபன் (12), கார் ஓட்டி வந்த ஜெமினி, அவருடைய மனைவி லவ்லிஜெமினி (51) மகன் நவீன்(20) ஆகிய 6 பேரும் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பலியான டோனி ஓமனகுட்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த 6 பேரும் மீட்கப்பட்டு அங்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டனர் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே விபத்துக்குள்ளான காரை மீட்பு வாகனம் மூலம் போலீசார் இழுத்து வந்தனர். தேனி-கம்பம் சாலையில் தப்புக்குண்டு விலக்கு அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென கார் தீப்பிடித்தது. சிறிதுநேரத்தில் அந்த கார் கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தேனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் அந்த கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது. இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.

Next Story