தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயிர்களை காப்பாற்றும் விவசாயிகள்
நீலகிரியில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் விவசாயிகள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயிர்களுக்கு நீர் பாய்ச்சி வருகின்றனர்.
ஊட்டி,
கேரளாவில் ஆண்டு தோறும் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும், மலைப் பிரதேசமான நீலகிரியிலும் மழை பெய்ய ஆரம்பிக்கும். நடப்பாண்டில் ஊட்டியில் கடந்த மாதம் ஓரிரு நாட்கள் மட்டுமே மழை பெய்தது. அதன் பின்னர் மழை பெய்யவில்லை. பகலில் வெயிலும், மாலை மற்றும் இரவில் குளிரும் நிலவி வருகிறது.
தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக குறைந்த வண்ணம் உள்ளது. மேலும் வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் ஊறுவது மிகவும் குறைந்து விட்டது. அதன் காரணமாக விவசாய விளைநிலங்களை ஒட்டியுள்ள நீரோடைகள் வறண்டு காணப்படுகின்றன. ஊட்டி சுற்றுப்புற பகுதிகளான எம்.பாலாடா, கப்பத்தொரை, நஞ்சநாடு, அணிக்கொரை, தூனேரி, கடநாடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் செய்வதற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. ஊட்டி கோடப்பமந்து பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களில் கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டது.
பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். தங்களது நிலத்தில் பயிரிட்ட உருளைக்கிழங்கு, கேரட் போன்ற பயிர்களை எப்படியாவது விளைய வைக்க வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறார்கள். போதிய அளவு மழை பெய்யாததால், அருகில் உள்ள தோட்டங்களில் இருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி பயிர்களுக்கு பாய்ச்சி காப்பாற்றி வருகின்றனர். விவசாய பயன்பாட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.500 முதல் ரூ.ஆயிரம் வரை தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது.
குறைந்தபட்சம் 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. டீசல் மோட்டாரை ஒரு மணி நேரம் பயன்படுத்தினால், 5 லிட்டர் டீசல் ஆகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ.70-க்கு விற்பனையாகிறது. விவசாயிகள் விலைக்கு தண்ணீர் வாங்குவதோடு, டீசலுக்கும் செலவழிப்பதால் கட்டுப்படி ஆகுமா என்பது கேள்விக்குறி தான். சில வாரங்களில் மலைக்காய்கறிகளை விளைய வைத்து விடலாம் என்ற நோக்கில் விவசாயிகள் களமிறங்கி உள்ளனர்.
இதுகுறித்து விவசாயி பிரகாஷ் கூறியதாவது:-
நீலகிரியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு விவசாயிகள் தற்போது நுண்ணீர் பாசனம் மேற்கொண்டு வருகின்றனர் இருந்தாலும், மழை பெய்யாததால் பல இடங்களில் கடுமையாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
ஒரு சில தோட்டங்களில் உள்ள கிணறுகளில் மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனை பிற விவசாயிகள் விலை கொடுத்து வாங்கி தங்களது பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வரும் நிலை உள்ளது. மழை பெய்தால் மட்டுமே விவசாய பயிர்களை விளைவிக்க முடியும். மேலும் விவசாயத்துக்கு பயன்படுத்தும் டீசலுக்கு மானியம் வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story