விக்கிரவாண்டி அருகே, தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விக்கிரவாண்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அருகே உள்ள கொசப்பாளையம் எஜமான் கார்டன் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் காஞ்சீபுரத்தில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பத்மினிபிரியா (வயது 27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
பத்மினிபிரியா தனது குழந்தைகள் மற்றும் தாய் ஞானசவுந்தரியுடன் எஜமான் கார்டனில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். தட்சிணாமூர்த்தி விடுமுறை நாட்களில் இங்கு வந்து செல்வார். நேற்று முன்தினம் இரவு பத்மினிபிரியா தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், வீட்டின் வெளிப்புற கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டின் பின்பக்க கதவு தாழ்பாளை நைசாக நெம்பி திறந்து உள்ளே சென்று அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 5 பவுன் நகை மற்றும் ½ கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.1½ லட்சமாகும்.
இதனிடையே நேற்று காலை பத்மினிபிரியா கண்விழித்து பார்த்தபோது பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர், விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story