திட்டக்குடி அருகே, 3 கோவில்களில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


திட்டக்குடி அருகே, 3 கோவில்களில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 1 July 2019 4:15 AM IST (Updated: 1 July 2019 5:54 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே 3 கோவில்களில் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திட்டக்குடி, 

திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தில் பழமை வாய்ந்த மஞ்சமுத்து அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த தங்கமணி என்பவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பூசாரி தங்கமணி வழக்கம்போல் பூஜை முடிந்ததும், கோவில் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் வழக்கம்போல் கோவில் கதவை திறக்க வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த தங்கமணி இதுபற்றி ஊர்முக்கியஸ்தர்களுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோவிலை பார்வையிட்டனர்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரித்தனர். விசாரணையில் நள்ளிரவில் கோவில் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், கோவிலில் வைத்திருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும், அருகில் உள்ள கருப்புசாமி, முத்துமாரியம்மன் ஆகிய கோவில்களின் பூட்டுகளை உடைத்து உண்டியல்களில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. ஆனால் உண்டியல்களில் எவ்வளவு பணம் இருந்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி 3 கோவில்களில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story