நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன், ஆணவ படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டும் - திருமாவளவன் எம்.பி. பேச்சு


நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன், ஆணவ படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டும் - திருமாவளவன் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 1 July 2019 4:00 AM IST (Updated: 1 July 2019 6:05 AM IST)
t-max-icont-min-icon

ஆணவ படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டும் என்றும், இதற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றும் திருமாவளவன் எம்.பி. கூறினார்.

மேலூர், 

மதுரை மாவட்டம், மேலூர் அருகே மேலவளவில் கடந்த 1997-ம் ஆண்டு ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உள்பட 7 பேர் கொலை செய்யப்பட்டனர். மேலவளவில் அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விடுதலைக்களம் என்ற நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது.

இதையடுத்து ஆண்டுதோறும் ஜூன் 30-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சியினர், பிற கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மேலவளவிற்கு வந்து நினைவு தினம் அனுசரித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன்படி 7 பேர் படுகொலையான 22-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று மேலவளவில் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி திருமாவளவன் எம்.பி. மேலவளவுக்கு வந்தார். முன்னதாக மேலவளவில் அவரை, மதுரை எம்.பி. வெங்கடேசன் வரவேற்றார். இதையடுத்து மேலவளவில் உள்ள விடுதலைக்களத்தில் அவரும் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் திருமாவளவன் பேசியதாவது:-

மேலூர் தாலுகாவில் 144 தடை உத்தரவு எனக்கு எதிராக போடப்பட்டுள்ளது. இதனை கண்டித்து முகநூலில் பதிவு செய்ததுடன், கட்சி தொண்டர்கள் வாகனங்களில் கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்து செல்ல வேண்டுமென அறிவுறுத்தினேன். இதுதான் பொறுப்புள்ள தலைவனுக்கு உள்ள மரபு.

தனி தொகுதியை எதிர்த்து எந்த போராட்டம் நடத்தினாலும் அதனை மாற்றி அமைக்கும் அதிகாரம் தமிழக முதல்-அமைச்சருக்கோ அல்லது மாநில தேர்தல் ஆணையருக்கோ இல்லை. சாதி அமைப்புகளுக்கு தலைவராக உள்ளவர்கள் வன்முறையை தூண்டிவிடும் சுயநலம் படைத்தவர்களாக உள்ளனர். எனக்கு சமூகநீதி தான் முக்கியம்.

தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலை நடைபெற்று வருகின்றது. சாதி, மத வெறி பிடித்தவர்களால் தான் தமிழகத்தில் ஆணவ படுகொலை நடைபெற்று வருகின்றது. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டுமென குரல் கொடுப்பேன். இதற்கு தனி சட்டம் கொண்டு வர வேண்டும். எனக்கு கிடைத்த எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது. சாதியை வைத்து நாங்கள் அரசியல் செய்யவில்லை. சாதி ஒழிப்பை முன் நிறுத்தியே அரசியல் செய்து வருகிறோம்.

நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடரில் முத்தலாக் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முன் வந்துள்ளது. ஆணவ கொலைகளை தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டு வருகிறதா என கேள்வி எழுகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. ஆனால் தமிழக அரசு குடிநீர் பிரச்சினை இல்லை சொல்லி வருகிறது. தேசிய கல்வி கொள்கை மிகவும் ஆபத்தானது. மத்திய அரசு தேசிய கல்வி கொள்கையை தன்னிச்சையாக செயல்படுத்த நினைக்கிறது. தேசிய கல்வி கொள்கை மூலம் இந்தியாவை காவிமயமாக்க பா.ஜ.க. அரசு முயல்கிறது.

ஒரே தேசம், ஒரே ரேஷன் திட்டம் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. இது குறித்து போதிய விவரங்களை திரட்டிய பின்னர் கருத்து தெரிவிப்பேன். ஒரே நாடு, ஒரே மொழி என்ற ஒற்றை கலாசாரத்திற்கு கொண்டு செல்ல பா.ஜ.க. முயற்சிக்கிறது. ஒரே நேரத்தில் தேர்தல் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக அமையும். இதனை மோடி அரசு கைவிட வேண்டும். சமீபத்தில் மேலூர் அருகே கொடுக்கம்பட்டியில் நடைபெற்ற கொலை சம்பவம் தற்செயலாக நடைபெற்றது. அவர்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story