கலாசாரத்தை பாதுகாத்தால்தான் மக்களை பாதுகாக்க முடியும் விஜயேந்திரர் பேச்சு


கலாசாரத்தை பாதுகாத்தால்தான் மக்களை பாதுகாக்க முடியும் விஜயேந்திரர் பேச்சு
x
தினத்தந்தி 2 July 2019 4:30 AM IST (Updated: 2 July 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

கலாசாரத்தை பாதுகாத்தால்தான் மக்களை பாதுகாக்க முடியும் என்று விஜயேந்திரர் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற சாதனா நிகழ்ச்சியில் இளைஞர்கள் மேம்பாட்டு திட்டம், வேத, சாஸ்திர, கலை மற்றும் கலாசார பாரம்பரியங்களை பற்றிய விரிவுரை நிகழ்ச்சி நேற்று நடந்தது. தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.

இதில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியா ஒரே கலாசாரம் உடைய நாடு. இந்த கலாசாரத்தை காக்க, ஆராய்ச்சிகள் மேற்கொள்ள, மத்திய அரசின் கலாசார துறை சார்பில் பல பகுதிகளில் கலாசார அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒரே கலாசாரம் இருந்து வருகிறது. இதன் மூலம் உலக அமைதி பாதுகாக்கப்பட வேண்டும்.

கலாசாரத்தை தனிமனித வெறுப்புகளை தாண்டி பாதுகாக்கவேண்டிய அக்கறை உள்ளது. 64 கலைகளையும் பாதுகாக்க வேண்டும். கலைஞர்களை போற்ற வேண்டும். நமது நாட்டின் கலாசாரம் பல நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவின் கலாசாரம் பல நாடு, பல மொழிகளை கடந்து உள்ளது. உலகத்துக்கே கலாசாரத்தை அறிமுகப்படுத்தியது இந்தியா. அப்படிப்பட்ட பழமையான கலாசாரத்தை ஞாபகப்படுத்தும் இடங்களாக கோவில்கள் விளங்கி வருகிறது.

கலாசாரத்தின் முக்கியத்துவத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய காலக்கட்டத்தில் உள்ளோம். கலாசாரத்தை பாதுகாப்பதன் மூலம்தான் மக்களை பாதுகாக்க முடியும். இசை சார்ந்த கலைகளோடு, வேத உபதேசங்களும் அடங்கி உள்ளது. நமது கலாசாரம் மனதை சுத்தப்படுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மிருதங்க வித்வான் டி.கே.மூர்த்தி, கொன்னக்கோல் வித்வான் தாயுமானவன், கிளாரினெட் இசை கலைஞர் ஏ.கே.சி.நடராஜன், சிற்பி சந்திரசேகர், சிற்பக்கலை ஸ்தபதி வித்யாசங்கர், தஞ்சையை சேர்ந்த நாடிராவ் மற்றும் பல இசை கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

Next Story