கண்ணமங்கலம் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


கண்ணமங்கலம் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 July 2019 3:45 AM IST (Updated: 2 July 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை - பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே உள்ள அர்ஜூனாபுரம் கிராமத்தில் படவேடு செல்லும் ரோட்டில் வசிப்பவர் கோவிந்தராஜ் (வயது 60), முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி அம்சா (55). இவர்களுக்கு ஆனந்தராஜ், முருகன், பாலாஜி என 3 மகன்கள் உள்ளனர். ஆனந்தராஜ், பாலாஜி ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் விடுமுறையில் சொந்த ஊருக்கு ஆனந்தராஜ் வந்துள்ளார். இவரது மனைவி சரஸ்வதியின் தங்கை திருமணத்திற்கு துணிகள் எடுக்க அம்சா, ஆனந்தராஜ், சரஸ்வதி ஆகிய 3 பேரும் நேற்று காலை ஆரணிக்கு சென்றனர். 2-வது மகன் முருகன் எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் கோவிந்தராஜ் நேற்று பகலில் வீட்டை பூட்டிக்கொண்டு அர்ஜூனாபுரம் கிராமத்தில் உள்ள டீ கடைக்கு சென்றுவிட்டு, மதியம் 1 மணி அளவில் வீட்டிற்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகை - பணத்தின் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் இருக்கும்.

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயபிரகாஷ், சப் -இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story