சிவமொக்கா மாவட்டத்தில் தொடர் கனமழை; துங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


சிவமொக்கா மாவட்டத்தில் தொடர் கனமழை; துங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு:  கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 July 2019 4:15 AM IST (Updated: 2 July 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்கா மாவட்டத்தில் தொடர் கனமழையால் துங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ள நிலையில் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

சிவமொக்கா,

சிவமொக்கா மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் துங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் துங்கா அணை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணை நிரம்ப இன்னும் 2 அடிகளே பாக்கி உள்ளன.

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. குறிப்பாக மலைநாடு என்று வர்ணிக்கப்படும் சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கி உள்ளது.

மாவட்டத்தின் பல இடங்களில் விவசாய நிலங்களை வெள்ளம் மூழ்கடித்து இருக்கிறது. குறிப்பாக சிவமொக்கா, மண்டகத்தே, தீர்த்தஹள்ளி, ஷராவதி பள்ளத்தாக்கு, ரிப்பன்பேட்டை, ஒசநகர், சிகாரிப்புரா, சொரப் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது.

இதனால் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் பத்ராவதியில் மட்டுமே குறைந்த அளவிலான மழை பதிவாகி உள்ளது. தீர்த்தஹள்ளியில் அதிக அளவில் மழை பெய்திருக்கிறது. அங்கு 62.4 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிகாரிப்புரா மற்றும் சாகர் பகுதிகளில் 22 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக பதிவாகி உள்ளது.

தொடர் மழை காரணமாக துங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சிவமொக்கா தாலுகா காஜனூரில் உள்ள துங்கா அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணை நிரம்புவதற்கு இன்னும் சில அடிகளே உள்ளன. அணை நிரம்பியதும் எந்த நேரத்திலும் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் துங்கா ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர மக்களை மேடான பகுதிக்கோ அல்லது பாதுகாப்பான பகுதிக்கோ சென்றுவிடும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் தண்டோரா மூலமும் கிராமம், கிராமமாக சென்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி நீர்ப்பாசனத்துறை அதிகாரி கரியப்பா கூறுகையில், “துங்கா அணை இன்று(அதாவது நேற்று) காலை நிலவரப்படி முழு கொள்ளளவை எட்டி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அணை நிரம்ப இன்னும் 2 அடிகள்தான் பாக்கி உள்ளன. அணைக்கு தற்போது வினாடிக்கு 1,747.67 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நிரம்பினால் எந்த நேரத்திலும் அணையில் இருந்து கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படலாம். மேலும் துங்கா ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் துங்கா அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story