வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்


வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 July 2019 4:30 AM IST (Updated: 2 July 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி,

திருச்சி மாநகரில் போக்குவரத்தை காரணம் காட்டி தரைக்கடைகளை அப்புறப்படுத்தக்கூடாது. கார்பார்க்கிங் வசதி இல்லாத பெரிய கடைகளை இழுத்து மூடவேண்டும். தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருச்சி மாவட்ட தரைக்கடை, சிறுகடை வியாபாரிகள் சங்கங்கள் இணைந்த ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அன்சர்தீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் திராவிடமணி, கவுரவத் தலைவர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சுரேஷ், செயலாளர் மணி, மாவட்டக்குழு உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் பேசினர் ஆர்ப்பாட்டம் முடிவில் கலெக்டர் சிவராசுவிடம் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி என்.எஸ்.பி.ரோடு, தெப்பக்குளம், தேரடி பஜார், சின்னக்கடை வீதி, நந்திகோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக தரைக்கடை போட்டு பிழைப்பு நடத்தி வருகிறோம். மத்திய அரசு, சிறு வியாபாரிகள் 2015 என்ற சட்டத்தை இயற்றி உள்ளது. அந்த சட்டத்தில் தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும். போக்குவரத்தை காரணம் காட்டி அவற்றை அப்புறப்படுத்த கூடாது. ‘வெண்டிங் கமிட்டி’ என்ற வியாபாரக்குழுவை அமைத்து தரைக்கடை வியாபாரிகளை ஒழுங்குப்படுத்தி தேர்தல் நடத்திட வேண்டும் என கூறி உள்ளது. மதுரை ஐகோர்ட்டு கிளையும் தரைக்கடைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும் என கூறி உள்ளது.

இந்த நிலையில் திருச்சி பெரியகடை வீதியில் வருகிற 9-ந் தேதி தரைக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என பெரிய வியாபாரிகள் இணைந்த வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கடையடைப்பு நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார். இது சாலையோர வியாபாரிகள் சட்டத்திற்கு எதிரானது. எனவே, பெரிய முதலாளிகளின் போராட்டத்தை தடுத்து நிறுத்தி தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story