4-வது நாளாக கொட்டி தீர்த்த மழை : வெள்ளத்தில் மிதக்கும் மும்பை
மும்பையில் நேற்று 4-வது நாளாக பலத்த மழை கொட்டி தீர்த்ததால், நகரின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தானே, பால்கர் மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மீண்டும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கனமழை தொடர்ந்து நேற்று 4-வது நாளாக நீடித்தது.
மும்பையில் நேற்று விடிய, விடிய பேய் மழை பெய்தது. பகலிலும் நாள் முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது.
மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் இடைவிடாமல் கொட்டி வரும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டு உள்ளது. இந்த பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. சாலைகள், தெருக்களிலும் மழைவெள்ளம் தேங்கி உள்ளது.
கனமழையால் நகர பகுதிகள் மற்றும் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மாநில தலைநகர் மும்பை வெள்ளத்தில் தத்தளித்தது. வழக்கம் போல் மும்பையின் தாழ்வான தாதர் இந்துமாதா, கிங்சர்க்கிள், மலாடு, அந்தேரி மிலன் சப்வே உள்ளிட்ட இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ரெயில் நிலையங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. மாட்டுங்கா, சயான், கல்வா, தானே, நாலச்சோப்ரா, பால்கர் ரெயில் நிலையங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
மத்திய ரெயில்வே வழித்தடத்தில் 100-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
மாட்டுங்கா- சயான் இடையே தண்டவாளங்களை மூழ்கடித்தபடி வெள்ளநீர் கரை புரண்டு ஓடியது. இதன் காரணமாக ரெயில்கள் ஆமை வேகத்திலேயே இயக்கப்பட்டன. மின்சார ரெயில்கள் 45 நிமிடங்கள் வரையிலும் தாமதமாக இயக்கப்பட்டன.
இதன் காரணமாக ரெயில்களில் கால் வைக்க முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் இருந்தது. மெரின்லைன் ரெயில் நிலைய பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடத்தில் கட்டப்பட்டு இருந்த மூங்கில் கம்பு ஓவர்ஹெட் மின்கம்பியில் சரிந்து விழுந்தது. இதனால் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் காலை மின்சார ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
காலை 11 மணி வரை மும்பை சென்டிரல்- சர்ச்கேட் இடையே மின்சார ரெயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
கனமழை காரணமாக பால்கர், வசாய் உள்பட பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். பலத்த மழையால் விமான போக்குவரத்திலும் பாதிப்பு உணரப்பட்டது.
ரெயில் நிலையங்களிலும் தானே, வசாய், நாலச்சோப்ரா, விரார், பால்கர், பிவண்டி, உல்லாஸ்நகர் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு பகுதிகளை அதிகளவில் வெள்ளம் சூழ்ந்தது.
ஒரு சில இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் வெள்ளத்தினால் ஏரிகள் போல் காட்சி அளித்தன. இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மும்பை, தானே, நவிமும்பை நகரங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஏரிகள் மற்றும் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகின்றன. நேற்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 118 மி.மீட்டரும், கிழக்கு புறநகரில் 99 மி.மீட்டரும், மேற்கு புறநகரில் 77 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. தகானுவில் 299 மி.மீ., அலிபாக்கில் 121 மி.மீ. மழையும் பதிவாகி இருந்தது.
இந்தநிலையில், மும்பையில் சில இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தானே, பால்கரில் இன்று மற்றும் வருகிற 4 மற்றும் 5-ந் தேதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ள நிலையில் மீண்டும் கனமழை எச்சரிக்கையால் மும்பை நகருக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டு உள்ளது.
அபாய கட்டத்தில் மும்பை நகரம் ; ஒரே நாளில் 200 மி.மீ. மழை பெய்யுமா?
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான தானே, பால்கர் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ள நிலையில் நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 5-ந்தேதி வரை மிக, மிக கனமழை பெய்யக்கூடும் என ஸ்கைமெட் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அப்போது, ஒவ்வொரு நாளும் 200 மி.மீட்டர் அல்லது அதற்கு மேல் பேய் மழை கொட்டும் என்றும், மும்பை அபாய கட்டத்தில் இருப்பதாகவும் அந்த வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.
இதன் காரணமாக கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ள அபாய அச்சம் மும்பைவாசிகள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story