கிண்ணக்கொரையில், 10 ஏக்கர் வனப்பகுதி காட்டுத்தீயில் எரிந்து நாசம்
கிண்ணக்கொரையில் 10 ஏக்கர் வனப்பகுதி காட்டுத்தீயில் எரிந்து நாசமானது.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடலூர், ஊட்டி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஆனால் குந்தா தாலுகாவில் மழை பெய்யவில்லை. குறிப்பாக மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை பொய்த்து விட்டது. மேலும் தென்மேற்கு பருவமழையும் கைகொடுக்கவில்லை. வனப்பகுதிகளில் வறட்சி நிலவி வருவதால், ஆங்காங்கே காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த நிலையில் மஞ்சூர் அருகே கிண்ணக்கொரை தனியகண்டி பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தில் நேற்று காலை காட்டுத்தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரகர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். தொடர்ந்து மாலை வரை போராடி காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீயில் 10 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதியில் கோரை புற்கள், காட்டு செடிகள் எரிந்து நாசமாகியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதேபோன்று மஞ்சூர்- ஊட்டி சாலையில் பழைய தாலுகா அலுவலகம் அருகில் குந்தா மின்வாரிய விருந்தினர் மாளிகை உள்ளது. இதனருகில் நேற்று மதியம் 1.30 மணிக்கு காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதை பார்த்த மின்வாரிய செயற்பொறியாளர் ரகு தலைமையிலான ஊழியர்கள் வாளிகளில் தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீயில் விருந்தினர் மாளிகையை சுற்றிலும் அமைக்கப்பட்ட காம்பவுண்டு சேதம் அடைந்தது.
Related Tags :
Next Story