சிறுமியை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தந்தை தற்கொலை
குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்து சிறுமியை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
மதுரை,
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டின் ஓரம் முட்புதர் சூழ்ந்த பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், வாயில் நுரை தள்ளிய நிலையில் ஒரு சிறுமியும் பிணமாக கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் உடனடியாக ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அங்கு விசாரணை நடத்தினார்கள். இறந்துகிடந்தவர்கள் அருகில் இருந்த கைப்பையை சோதனையிட்டபோது அதில் ஓட்டுனர் உரிமம் இருந்தது. அதனைக் கொண்டு விசாரித்ததில் இறந்தவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சேரன்நகரை சேர்ந்த கிங்ஸ்டன் கிருபாகரன் (வயது 41) என்பதும், பிணமாக கிடந்த சிறுமி அவருடைய மகள் ஸ்வீட்டி (9) என்பதும் தெரியவந்தது. கிங்ஸ்டன் கிருபாகரன் தனது மகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தந்தை-மகளின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
கிங்ஸ்டன் கிருபாகரன் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டது ஏன்? என்பது குறித்து போலீசார் கூறியதாவது:-
கிங்ஸ்டன் கிருபாகரன் கோவை மாவட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். அவருடைய மனைவி விஜி. இவர்களுடைய மகளான ஸ்வீட்டி அப்பகுதியில் மேட்டுப்பாளையம் சேரன்நகர் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.
கிங்ஸ்டன் கிருபாகரனுக்கும், அவருடைய மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர். மகள் ஸ்வீட்டி தனது தந்தையுடன் வசித்து வந்தாள். மனைவி பிரிந்து சென்றதால் கிங்ஸ்டன் கிருபாகரன் மனவருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்தநிலையில் அவர், தனது மகள் ஸ்வீட்டியுடன் நேற்று முன்தினம் மதுரையில் உள்ள அவருடைய உறவினர் வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. இரவில் திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் தபோவனம் என்ற பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டை ஒட்டியுள்ள முட்புதருக்கு கிங்ஸ்டன் கிருபாகரன், தனது மகளை அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் அங்கு அவர் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து தனது மகளுக்கு கொடுத்துள்ளார். விஷம் என்று அறியாத சிறுமி ஸ்வீட்டி அதனை குடித்துள்ளாள். பின்னர் கிங்ஸ்டன் கிருபாகரனும் விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்துள்ளார். இதில் 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்துபோனார்கள்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story