குடிமராமத்து முறையில் கண்மாய்களை ஆழப்படுத்த அனுமதிக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்
மாவட்டத்தில் குடிமராமத்து முறையில் கண்மாய்களின் உட்பகுதியை ஆழப்படுத்த அனுமதிக்க வேண்டுமென இதுதொடர்பான ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
விருதுநகர்,
தமிழக அரசு, மாநிலம் முழுவதும் குடிமராமத்து முறையில் கண்மாய்களை ஆழப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விருதுநகர் மாவட்டத்திலும் குடிமராமத்து முறையில் 65 பொதுப்பணித்துறை கண்மாய்களை சீரமைக்க ரூ.26 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிகளை பாசனதாரர்கள் சங்கத்தின் மூலம் மேற்கொள்ள வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற் கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், குடிமராமத்து முறையில் கண்மாய் கரைகளை பலப்படுத்துதல். பலகைகளை அடைத்தல், வரத்து கால்வாய்களை தூர்வாருதல் போன்ற பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பணிகளை மட்டுமே மேற்கொள்வதால் பலன் ஏதும் இருக்காது என்று தெரிவித்தனர்.
மேலும் கண்மாய்களில் நீரை தேக்கி வைக்கும் நிலையில் கண்மாய்களின் உட்பகுதிகளை குறைந்தபட்சம் 2 மீட்டராவது ஆழப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் தற்போது கண்மாய்களின் உட்பகுதியை ஆழப்படுத்த வாய்ப்பு இல்லை என கலெக்டர் சிவஞானம் தெரிவித்தார்.
குடிமராமத்து முறையில் பொதுப்பணித்துறை கண்மாய்களை மட்டுமே மராமத்து செய்ய அரசு அனுமதித்துள்ள நிலையில் இந்த மாவட்டத்தில் உள்ள 700-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து யூனியன் கண்மாய்கள் யாராலும் கவனிக்கப்படாத நிலையில் உள்ளதால் அவற்றையும் மராமத்து செய்ய அரசு அனுமதிக்க வேண்டுமென விவசாயிகள் சங்க தலைவர் விஜயமுருகன் வலியுறுத்தினார். ஆனால் அரசு தற்போது இதற்கு அனுமதி தரவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மொத்தத்தில் நீராதாரத்தை பெருக்குவதற்காகவே குடிமராமத்து முறையில் கண்மாய்களை மராமத்து செய்ய அரசு உத்தரவிட்டிருந்த போதிலும், இதன்மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளால் கண்மாய்களில் நீரைத்தேக்கி வைக்க வாய்ப்பு ஏற்படாத நிலையில் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
Related Tags :
Next Story