திருப்பூரில் ‘மெஸ்’ உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை - கடன் பிரச்சினையா? போலீசார் விசாரணை


திருப்பூரில் ‘மெஸ்’ உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை - கடன் பிரச்சினையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 July 2019 4:45 AM IST (Updated: 2 July 2019 4:45 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில், மெஸ் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்,

திருப்பூரில், மெஸ் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் வாலிபாளையம் முருகன்கோவில் பகுதியை சேர்ந்தவர் தேவபிரகாஷ்(வயது 35). இவர் அதே பகுதியில் தனது குடும்பத்தினருடன் இணைந்து ‘மெஸ்’ நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். நேற்று இரவு இவருடைய வீட்டில் தேவபிரகாஷ் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி, சிலருக்கு செல்போனில் தொடர்பு கொண்டும், சிலருக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உடனடியாக திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின்படி, அங்கு விரைந்து சென்ற போலீசார், ‘மெஸ்’சின் கதவை திறக்க முயற்சித்துள்ளனர். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு தேவபிரகாஷ் சேலையால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

போலீசார் அவரின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அத்துடன் அந்த அறையை சோதனையிட்டனர். அப்போது அந்த அறையில் தேவபிரகாஷ் கைப்பட எழுதிவைத்திருந்த 4 பக்க கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், இதற்காக தன்னை மன்னித்துக்கொள்ளும்படியும் எழுதப்பட்டிருந்தது. மேலும், அந்த கடிதத்தில் 4 பேரின் பெயரை குறிப்பிட்டு, எனது சாவுக்கு இவர்கள் தான் காரணம் என்றும், அவர்களால் தான் எனது வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் அதில் குறிப்பிடப்பட்டிருந்தவர்கள் யார்? என்பது குறித்தும், தேவபிரகாஷ் தற்கொலை செய்து கொள்ள அவர்கள் எவ்வாறு காரணமாக இருந்தார்கள்? என்பது குறித்தும், கடன் பிரச்சினையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை

பொதுவாக தற்கொலை செய்துகொள்பவர்கள் யாருக்கும் தெரியாமல் தற்கொலை செய்து கொள்வது வழக்கம். ஆனால் நேற்று தற்கொலை செய்து கொண்ட தேவபிரகாஷ், தற்கொலை செய்து கொள்ளும் சிறிது நேரத்திற்கு முன்பதாக பலருக்கு செல்போன் மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். சிலரின் செல்போன் எண்ணிற்கு, “ஐயா, நான் வாலிபாளையம் பகுதியில் உள்ள எனது மெஸ்ஸில், ஓட்டல் காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்ள போகிறேன். எனக்கு உதவி செய்யுங்கள்.” என்று ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி மூலமாகவும் தகவல் தெரிவித்துள்ளார். இந்த குறுஞ்செய்தியை அனுப்பிய பின்னரே அவர் தூக்கில் தொங்கியுள்ளார்.


Next Story