குடிமராமத்து திட்டத்தில் ஆண்டிக்காடு ஏரியை தூர்வாரும் பணி கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்


குடிமராமத்து திட்டத்தில் ஆண்டிக்காடு ஏரியை தூர்வாரும் பணி கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 July 2019 4:15 AM IST (Updated: 3 July 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

குடிமராமத்து திட்டத்தில் ஆண்டிக்காடு ஏரியை தூர்வாரும் பணியை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 524 ஏரிகள் மற்றும் ஏராளமான குளங்கள் கல்லணைக்கால்வாய் மூலமாக தண்ணீர் பெறுகின்றன. ஏரிகளில் தண்ணீர் நிரம்பினால் 23,419 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த நிலையில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் ஏரிகள் மற்றும் குளங்களை தூர்வார முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்படி குடிமராமத்து திட்டத்தில் சேதுபாவாசத்திரம் அருகே ஆண்டிக்காடு கிராமத்தில் உள்ள ஏரியை தூர்வார ரூ.63 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலமாக ஏரியின் கரையை பலப்படுத்துதல், ஏரியில் உள்ள மதகுகளை சரி செய்தல், வடிகாலை தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன. இந்த பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார். அப்போது கல்லணைக்கால்வாய் செயற்பொறியாளர் முருகேசன் உடன் இருந்தார். முன்னதாக விவசாயிகளின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

மரம் வளர்க்க வேண்டும்

தஞ்சை மாவட்டத்தில் மழையில்லாமல் கடும் வறட்சி நிலவி வருகிறது. கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் தஞ்சை மாவட்டத்தில் ஏராளமான மரங்கள் அழிந்து விட்டன. இதுவும் மழை இல்லாமைக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே மரங்களை வளர்ப்பதற்கு விவசாயிகள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். இந்த ஏரியை தூர்வாரி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள விவசாயிகளை கொண்டு பாசனதாரர் சங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. பாசனதாரர் சங்கத்துக்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள். இந்த திட்டத்தை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர் அன்பரசன், உதவி பொறியாளர் நாராயணசாமி, பட்டுக்கோட்டை தாசில்தார் அருண்பிரகாசம்,சேதுபாவாசத்திரம் ஒன்றிய ஆணையர் கோவிந்தராஜன், பாசனதாரர் சங்க தலைவர் கலைவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story