பலத்த மழையால் பொது விடுமுறை விடப்பட்டது ; 1000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்


பலத்த மழையால் பொது விடுமுறை விடப்பட்டது ; 1000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
x
தினத்தந்தி 3 July 2019 5:30 AM IST (Updated: 3 July 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

5-வது நாளாக பெய்த பலத்த மழை காரணமாக மும்பை முடங்கியது. அரசு சார்பில் பொது விடுமுறை விடப்பட்டது. 1000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மும்பை, 

மும்பையில் ஜூன் மாதம் தொடங்கும் பருவ மழை செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு பருவ மழை தாமதமாகவே தொடங்கியது. எனினும் பருவ காலம் தொடங்கிய நாள் முதல் மும்பையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. எனினும் 4 நாட்கள் பெய்த மழையால் மும்பையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்படாமல் இருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழைகொட்டியது. நேற்றும் 5-வது நாளாக மழை ெவளுத்து வாங்கியது. இடைவிடாமல் கொட்டி தீர்த்த மழையால் நேற்று முன்தினம் நள்ளிரவே பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. காந்திவிலி, வக்கோலா, சாந்தாகுருஸ், அந்தேரி, பாண்டுப் போன்ற பல்வேறு இடங்களில் உள்ள குடிசைப்பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் இரவு தூக்கத்தை தொலைத்து வீட்டுக்குள் புகுந்த மழைநீரை வாளிகளை கொண்டு வெளியேற்றி கொண்டு இருந்தனர்.

இதேபோல தண்டவாளங்களை மழைநீர் சூழ்ந்ததால் மத்திய ரெயில்வே, துறைமுக வழித்தடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பலர் ரெயில்நிலையங்களிலேயே இரவை கழித்தனர். ரெயில்நிலையத்தில் தங்கியவர்களுக்கு ரெயில்வே சார்பில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. நேற்றும் மும்பையில் சிக்னல் கோளாறு, வெள்ளம் காரணமாக மின்சார ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சயான் ரெயில்நிலையத்தில் பிளாட்பார உயரத்துக்கு மழைநீர் தேங்கியிருந்ததை காண முடிந்தது.

மழை காரணமாக மத்திய, மேற்கு ரெயில்வேயில் பல எக்ஸ்பிரஸ் ரெயில்சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தமிழக ரெயில்கள் உள்பட பல ரெயில்கள் புனே வரை இயக்கப்பட்டு மீண்டும் புனேயில் இருந்து சென்னை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. இதனால் வெளியூர் செல்ல இருந்தவர்கள் அவதி அடைந்தனர்.

இதேபோல பலத்த மழை காரணமாக மும்பையில் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிங் சர்க்கிள், தாதர் இந்து மாதா உள்ளிட்ட 16 இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த வழியாக செல்ல இருந்த 64-க்கும் மேற்பட்ட பெஸ்ட் பஸ் சேவைகள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன. எனினும் 58 பஸ்கள் வெள்ளத்தில் சிக்கின. மழையில் இயக்கப்பட்ட 152 பஸ்கள் பழுந்தடைந்து நடுவழியில் நின்றன.

பல இடங்களில் வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்களால் மீட்டு வெளியே கொண்டு வரப்பட்டன.

முன்னதாக பலத்த மழை காரணமாக நேற்று மும்பையில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை. மும்பை பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கு நடைபெற இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 5-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பலத்த மழை காரணமாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று நடைபெற இருந்த எம்.எல்.ஏ. விடுதி கட்டிட பூமி பூஜை விழாவை ரத்து செய்தார். முதல்-மந்திரி மும்பை மாநகராட்சி பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்று மாநகராட்சி மேற்கொண்டு வரும் மீட்பு பணிகள், முன் எச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் அவர் உயர் போலீஸ், ரெயில்வே, மாநகராட்சி அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். அவர் மீட்பு பணிகளை முடுக்கிவிடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் பல்வேறு இடங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். மலாடு துயர சம்பவத்தை அடுத்து குர்லா, கிராந்தி நகாில் ஆபத்தான பகுதிகளில் வசித்து வந்த 1000-த்துக்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் யாரும் சிக்கி உள்ளார்களா? என மிதவைகளுடன் மீட்பு படையினர், கடற்படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் போரிவிலியில் 380 மி.மீ. மழையும், மலாடு 420 மி.மீ., பவாய் 402 மி.மீ., செம்பூர் 317 மி.மீ., காட்கோபர் 380 மி.மீ., குர்லா 294 மி.மீ., கொலபா 120 மி.மீ., தாதரில் 169 மி.மீ. மழையும் பதிவாகி இருந்தது.

மும்பை தவிர தானே, பால்கர் பகுதியிலும் மழை கொட்டி தீர்த்தது. நாளை(வியாழக்கிழமை), நாளை மறுநாள் தானே, பால்கரில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதேபோல அடுத்த 3 நாட்களுக்கு மும்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஸ்கைமெட் தனியார் வானிலை நிறுவனம் எச்சரித்து உள்ளது. எனவே அடுத்த சில நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

Next Story