கறம்பக்குடி அருகே சொத்து தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு மனைவி-மகன் கைது


கறம்பக்குடி அருகே சொத்து தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு மனைவி-மகன் கைது
x
தினத்தந்தி 3 July 2019 3:45 AM IST (Updated: 3 July 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி அருகே சொத்து தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டிய மனைவி, மகன் கைது செய்யப்பட்டனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் புதுவிடுதியை சேர்ந்தவர் அப்துல்மஜீது (வயது 50). விவசாயி. இவரது மனைவி சைனம் பேகம் (43). இவர்களுக்கு பீர்முகமது (23), தாஜீர் முகமது (20) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் சென்னை மற்றும் திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனிகளில் வேலை பார்த்து வருகின்றனர்.

கணவன்-மனைவி இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் விவசாய நிலத்திலும் அதன் வருமானத்திலும் சைனம் பேகம் மற்றும் அவரது மகன்கள் பங்கு கேட்டு வந்தனர். ஆனால் அப்துல் மஜீது அதை தர மறுத்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சைனம் பேகம், வெளியூர்களில் வேலை பார்த்து வந்த 2 மகன்களையும் ஊருக்கு வரவழைத்தார். பின்னர் 3 பேரும் அவர்களது விவசாய தோட்டத்திற்கு அரிவாள், உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்றனர். அங்கு தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த அப்துல் மஜீதை அரிவாளால் வெட்டி, கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் அப்துல்மஜீது மயங்கி விழுந்தார். இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ரெகுநாதபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் உயிருக்கு போராடி கொண்டிருந்த அப்துல்மஜீதை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்மஜீதின் மனைவி சைனம்பேகம், மகன் பீர்முகமது ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான தாஜீர் முகமதுவை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story