ஒசநகர், ஷராவதி, லிங்கனமக்கி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை, ஜோக் நீர்வீழ்ச்சியில் வெள்ளம்; சுற்றுலா பயணிகள் படையெடுப்பு
ஒசநகர், ஷராவதி, லிங்கனமக்கி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஜோக் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டுகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
சிவமொக்கா,
சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவில் அமைந்துள்ளது ஜோக் நீர்வீழ்ச்சி. மிகவும் பிரசித்திபெற்ற இந்த சுற்றுலா தலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும் அழகை பார்த்து ரசித்து செல்கிறார்கள். கடந்த சில மாதங்களாக மழை குறைவாக இருந்ததால் இந்த நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக இருந்தது.
இதனால் இந்த நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்திருந்தது. இந்த நிலையில் சாகர், ஒசநகர், ஷராவதி, லிங்கனமக்கி ஆகிய பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யத்தொடங்கி உள்ளது. இதன்காரணமாக ஜோக் நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டுவதை பார்க்க ரம்மியமாக உள்ளது.
இதனால் மீண்டும் ஜோக் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கி உள்ளனர். இதுபற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் தயானந்த் நேற்று ஜோக் நீர்வீழ்ச்சிக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் ஜோக் நீர்வீழ்ச்சி பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாவட்ட சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதுமட்டுமல்லாமல் அப்பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், பிளாஸ்டிக் பொருட்கள், கழிவுகள், பாலிதீன் பைகள் ஆகியவை இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்தவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா பயணிகள் குப்பைகளை போடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story