கொடைக்கானல் மலையில் ஆயுதப்பயிற்சி, 7 மாவோயிஸ்டுகள் கோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவு


கொடைக்கானல் மலையில் ஆயுதப்பயிற்சி, 7 மாவோயிஸ்டுகள் கோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவு
x
தினத்தந்தி 3 July 2019 4:15 AM IST (Updated: 3 July 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் மலையில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் 7 மாவோயிஸ்டுகளும் வருகிற 16-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றுநீதிபதி உத்தரவிட்டார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வடகவுஞ்சி மலைப்பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து ஆயுதப்பயிற்சி மேற்கொண்டனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் விரைந்து சென்று, அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், நவீன்பிரசாத் என்ற மாவோயிஸ்டு கொல்லப்பட்டார்.

மேலும் பெண்கள் உள்பட 7 பேர் தப்பி விட்டனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாவோயிஸ்டுகளான கண்ணன், ரீனாஜாய்ஸ்மேரி, காளிதாஸ், பகத்சிங், செண்பகவல்லி, ரஞ்சித், நீலமேகம் ஆகியோரை கைது செய்தனர். இதில் நீலமேகம், ரஞ்சித் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்து சென்று விட்டனர். மீதம் உள்ள 5 பேரும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் கொடைக்கானல் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டனர். அதன் நகல்களும் 7 மாவோயிஸ்டுகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. இதனால் கோர்ட்டில் விரைவில் வழக்கு விசாரணை தீவிரம் அடைய உள்ளது. இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது காளிதாஸ், பகத்சிங், செண்பகவல்லி ஆகியோரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மேலும் கோவை சிறையில் இருக்கும் கண்ணன், ரீனாஜாய்ஸ்மேரி ஆகியோர் காணொலிக்காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். அதேபோல் ஜாமீனில் வெளியே இருக்கும் நீலமேகமும் ஆஜரானார். மற்றொருவரான ரஞ்சித் ஆஜராகவில்லை. இதனால் வழக்கின் விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு நீதிபதி ஜமுனா தள்ளிவைத்தார். அன்றைய தினம் 7 பேரும் கோர்ட்டில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story