கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பயணிகளை வழியனுப்ப வருபவர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கீடு சமாதான கூட்டத்தில் முடிவு


கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பயணிகளை வழியனுப்ப வருபவர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கீடு சமாதான கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 2 July 2019 10:42 PM GMT (Updated: 2 July 2019 10:42 PM GMT)

கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பயணிகளை வழியனுப்ப வருபவர்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்கீடு செய்வது என்று சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோவில்பட்டி,

கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு குத்தகைதாரர் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ரெயில் நிலையத்துக்கு பயணிகளை வழியனுப்ப வருபவர்களும், ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வருகிறவர்களும், ரெயில் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க வருகிறவர்களும், தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்கு கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது.

இதனைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், கோவில்பட்டி ரெயில் நிலையம் முன்பு நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று மதியம் நடந்தது. உதவி கலெக்டர் விஜயா தலைமை தாங்கினார். தாசில்தார் பரமசிவன், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சூரியகலா, ரெயில் நிலைய மேலாளர் சுடலைமணி, ரெயில்வே போலீஸ்காரர் அருண்குமார், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், நகர செயலாளர் சரோஜா, துணை செயலாளர்கள் முனியசாமி, பாபு, பரமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பயணிகளை வழியனுப்ப வருபவர்கள், டிக்கெட் முன்பதிவு செய்ய வருகிறவர்கள், ஏ.டி.எம். எந்திரத்தை பயன்படுத்த வருகிறவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்கீடு செய்வது. ரெயில் நிலைய வளாகத்தில் போதிய எண்ணிக்கையில் கண்காணிப்பு கேமராக்களை அமைப்பது.

இதுகுறித்து ரெயில் நிலைய மேலாளர் மூலமாக மதுரை ரெயில்வே கோட்ட மேலாளருக்கு கடிதம் அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனை அனைவரும் ஏற்று கொண்டனர். இதையடுத்து நேற்று மாலையில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தெரிவித்தனர்.

Next Story