கடன் பிரச்சினையில் தற்கொலை: மெஸ் உரிமையாளர் உடலை வாங்க மறுத்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்


கடன் பிரச்சினையில் தற்கொலை: மெஸ் உரிமையாளர் உடலை வாங்க மறுத்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்
x
தினத்தந்தி 3 July 2019 4:14 AM IST (Updated: 3 July 2019 4:14 AM IST)
t-max-icont-min-icon

கடன் பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்ட மெஸ் உரிமையாளரின் உடலை வாங்க மறுத்து போலீஸ் நிலையத்தை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

திருப்பூர்,

திருப்பூரில் கடன் பிரச்சினையில் மெஸ் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். கொடுத்த பணத்தை பெற்றுத்தரக்கோரி அவருடைய உடலை வாங்க மறுத்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

திருப்பூர் வாலிபாளையம் முருகன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தேவபிரகாஷ்(வயது 35). பொறியியல் பட்டதாரி. இவர் தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். பின்னர் அந்த வேலையை விட்டு விட்டு வாலிபாளையம் பகுதியில் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து மெஸ் நடத்தி வந்தார். இவருக்கு நித்யாதேவி(31) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

கடன் பிரச்சினையால் தேவபிரகாஷ் சிரமத்தை சந்தித்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தேவபிரகாஷ் செல்போன் எண்ணில் இருந்து, அவருடைய உறவினர்கள் நண்பர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். அதில் தான் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டு இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தேவபிரகாசின் மெஸ்சுக்கு சென்று பார்த்தனர். கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

திருப்பூர் வடக்கு போலீசாரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது தேவபிரகாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அந்த அறையில் இருந்து தேவபிரகாஷ் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

அந்த கடிதத்தில் தனது சித்தி, சித்தப்பாவுக்கு ரூ.10 லட்சம் கொடுத்ததில் கடன் ஏற்பட்டதாகவும், அவர்கள் அந்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொள்வதாகவும், தன்னை மன்னித்து விடுமாறும் எழுதியுள்ளார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் நேற்று தேவபிரகாசின் மனைவி மற்றும் உறவினர்கள் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். தேவபிரகாஷ் கொடுத்த ரூ.10 லட்சத்தை அவருடைய சித்தி, சித்தப்பாவிடம் இருந்து பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதன்பிறகே அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தேவபிரகாசின் உடலை வாங்குவோம் என்றும் தெரிவித்தனர்.

ஆனால் தேவபிரகாசின் சித்தி, சித்தப்பா ஆகியோர் தரப்பில் இருந்து வந்து போலீஸ் நிலையத்தில் சுமூக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

மாலை வரை பேச்சுவார்த்தை நடந்ததால் நேற்று தேவபிரகாசின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் வைக்கப்பட்டது.

கடன் பிரச்சினை காரணமாக மெஸ் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.10 லட்சம் கடனுக்காக தற்கொலை

தேவபிரகாஷ் மெஸ்சில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது:

எனது சித்தி மற்றும் சித்தப்பா ஆகியோர் மண்ணரையில் வசிக்கிறார்கள். அவர்கள் என்னிடம் இருந்து ரூ.10 லட்சம் பெற்றார்கள். நான் கடனாக வாங்கி அந்த தொகையை கொடுத்தேன். அவர்கள் அந்த பணத்தை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர். பின்னர் அந்த கடனை அடைப்பதற்காக எனது நண்பர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் கடன் பெற்றேன். அந்த கடனை அடைக்க தனியார் வங்கியில் ரூ.10 லட்சத்துக்கு நான் கடன் வாங்கி நண்பர்களுக்கு திருப்பிக்கொடுத்தேன்.

பின்னர் மெஸ் வைத்து நடத்தினேன். இதனால் வங்கியில் கடன் தொகையை என்னால் திருப்பி செலுத்த முடியவில்லை. செங்கப்பள்ளியில் உள்ள எனது வீட்டை விற்று கடனை கொடுக்க நினைத்தேன். இந்த முடிவால் மிகவும் வேதனை அடைந்தேன். அதனால் என் வாழ்வை முடித்து இந்த முடிவை தேடுகிறேன். என் சாவுக்கு பிறகு காவல்துறையும், நீதித்துறையும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து எனது பணத்தை மீட்டு என் குடும்பத்துக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எனது மனைவி, குழந்தைகளை நினைத்து மிகவும் வேதனை அடைகிறேன். எனது மாமா, அத்தை, மச்சான் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.


Next Story