வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் தகுதியின் அடிப்படையில் போலீசாருக்கு பணி ஒதுக்கப்படும் புதிதாக பொறுப்பேற்ற வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி பேட்டி


வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் தகுதியின் அடிப்படையில் போலீசாருக்கு பணி ஒதுக்கப்படும் புதிதாக பொறுப்பேற்ற வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி பேட்டி
x
தினத்தந்தி 2 July 2019 11:00 PM GMT (Updated: 2 July 2019 11:00 PM GMT)

வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் தகுதியின் அடிப்படையில் போலீசாருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்படும் என புதிதாக பொறுப்பேற்ற வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி தெரிவித்தார்.

வேலூர்,

வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த ரெயில்வே ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று மாறுதலாகி உள்ளார். இதையடுத்து ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக இருந்த காமினி, வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் வேலூர் அண்ணாசாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கு வேலூர், திருவண்ணாமலை மாவட்டம் புதிது. இங்குள்ள பிரச்சினைகள் குறித்து நான் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க உள்ளேன். எனது அனுபவம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களின் உரிமைக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும். கொடுஞ்செயல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மணல் திருட்டு, மோட்டார்சைக்கிள் பந்தயம், போக்குவரத்து நெரிசல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கான பணி ஒதுக்கீடு செய்யப்படும். திறமைக்கு ஏற்ப அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மற்றும் திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை உள்பட பலர் உடன் இருந்தனர்.

முன்னதாக இடமாற்றம் செய்யப்பட்ட டி.ஐ.ஜி. வனிதா மற்றும் போலீசார் புதிதாக பொறுப்பேற்ற டி.ஐ.ஜி.காமினிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Next Story