ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி - பெண் உள்பட 2 பேர் கைது
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில் போலீசார் பெண் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
சிவகங்கை,
மதுரையை சேர்ந்தவர் மாணிக்கவாசகம். இவர், தனது உறவினர் சென்னையில் ரெயில்வேயில் பணிபுரிந்து வருகிறார் என்றும், அவர் மூலம் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாகவும் அனைவரிடமும் கூறிவந்தாராம். இதையறிந்த விருதுநகர், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 50 பேர் கடந்த 2018-ம் ஆண்டு மாணிக்கவாசகத்திடம் வந்து வேலைக்கு கேட்டனர். அதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து, அதை நம்பிய அவர்கள் பணம் கொடுக்க முன்வந்தனர். அவர்களிடமிருந்து ரூ.1 கோடியே 12 லட்சத்து 99 ஆயிரத்தை மாணிக்கவாசகம் பெற்றுக் கொண்டார். நீண்ட நாட்கள் ஆகியும் வேலை வாங்கி தராததால், அவர்கள் தாங்கள் கொடுத்த பணத்தை மாணிக்கவாசகத்திடம் கேட்டனர்.
ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியும், பணத்தை திரும்ப தராமலும் காலந்தாழ்த்தி வந்துள்ளார். இதையடுத்து விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரை அடுத்த சங்குரெட்டிபட்டியை சேர்ந்த தங்கவேலு என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதனிடம் புகார் செய்தார்.
அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அல்லிராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, அருள் மொழிவர்மன் ஆகியோர் விசாரணை நடத்தி மாணிக்கவாசகம், அவருடைய மனைவி மாலா மற்றும் மகன்கள் ஹரிசங்கர், சித்தார்த், சிவராமன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் மாலா மற்றும் அவரது மகன் ஹரிசங்கர் ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story