கண்டமனூரில் பரபரப்பு, பிளஸ்-2 மாணவர்கள் 3 பேருக்கு கத்திக்குத்து - 4 பேர் மீது வழக்கு


கண்டமனூரில் பரபரப்பு, பிளஸ்-2 மாணவர்கள் 3 பேருக்கு கத்திக்குத்து - 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 3 July 2019 4:15 AM IST (Updated: 3 July 2019 5:05 AM IST)
t-max-icont-min-icon

கண்டமனூரில் 10-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தியதில் பிளஸ்-2 மாணவர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கண்டமனூர்,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 17 வயது மாணவர் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த பள்ளியில் அதே ஊரை சேர்ந்த 16 வயது மாணவன் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

கடந்த ஜூன் மாதம் 3-ந்தேதி பள்ளியில் உள்ள கழிவறையில் 10-ம் வகுப்பு மாணவன் சிகரெட் குடித்துள்ளான். அப்போது அங்கு வந்த பிளஸ்-2 மாணவர் அவனை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று 10-ம் வகுப்பு மாணவன் தனது நண்பர்கள் 3 பேருடன் பள்ளிக்கு வந்தான். அப்போது பிளஸ்-2 மாணவர் தன்னுடன் பிளஸ்-2 படிக்கும் நண்பர்களான மேலும் 2 மாணவர்களுடன் பள்ளி வளாகத்தின் முன்பு நின்று கொண்டிருந்தார். இந்தநிலையில் 10-ம் வகுப்பு மாணவன் மற்றும் அவனுடைய நண்பர்கள் சேர்ந்து பிளஸ்-2 மாணவரிடம் வாக்குவாதம் செய்தனர். இதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அப்போது 10-ம் வகுப்பு மாணவன் தான் வைத்திருந்த கத்தியால் பிளஸ்-2 மாணவர் மற்றும் அவருடன் படிக்கும் மேலும் 2 மாணவர்களையும் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் 10-ம் வகுப்பு மாணவனும், அவனது நணபர்களும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டனர்.

இது குறித்து கண்டமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து கத்திக்குத்தில் காயம் அடைந்த பிளஸ்-2 மாணவர்கள் 3 பேரையும் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதுதொடர்பாக 10-ம் வகுப்பு மாணவன் மற்றும் அடையாளம் தெரியாத 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கண்டமனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story