குடிநீர் தட்டுப்பாடு, கமுதி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி கமுதி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கமுதி,
கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய 3 தாலுகா பகுதிகளுக்கும், அபிராமம், மண்டலமாணிக்கம், பெருநாழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் குண்டாறு தடுப்பணை அருகே உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப்போனதால் குடிநீர் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து கமுதி அருகே செங்கப்படையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு தினமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. இதனால் கமுதி உள்பட அதை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்க வலியுறுத்தி கோட்டைமேடு கிராம மக்கள் கமுதி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்துராமலிங்கம், முக்குலத்தோர் முன்னேற்ற சங்க தலைவர் செல்லம், வக்கீல் அய்யாத்துரை, சண்முகவேல், போஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த கமுதி தாசில்தார் மீனலோசனி, போலீஸ் துணை சூப்பிரண்டு(பொ) முத்துராஜ் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குண்டாறு தடுப்பணை அருகே உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தனியார் நிறுவனத்திற்கு தண்ணீர் சப்ளை செய்யக்கூடாது என்று கிராம மக்கள் கூறினார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி கூறினார். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story