வெம்பாக்கம் தாலுகாவில் பாலாற்றின் கரையோர கிராமங்களில் மணல் கொள்ளை
வெம்பாக்கம் தாலுகாவில் பாலாற்றின் கரையோர கிராமங்களில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்யாறு,
வெம்பாக்கம் தாலுகாவை சேர்ந்த பிரம்மதேசம், புதூர், வளவனூர், வடஇலுப்பை, அரசங்குப்பம் மற்றும் தாளிக்கல் உள்ளிட்ட கிராமங்கள் பாலாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளன. இந்த கிராமங்களின் வழியாக லாரிகளில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை அதிகளவில் நடந்து வருகிறது.
தண்ணீர் பற்றாக்குறையால் பரிதவிக்கும் நிலையில் ஆற்று மணல் கொள்ளை நடந்து வருவதும், அதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். பாலாற்றின் கரையோர கிராமங்கள் வழியாக நாளுக்கு நாள் லாரியில் மணல் கடத்தல் அதிகரித்து வருகிறது.
அரசங்குப்பம், தாளிக்கல் உள்ளிட்ட கிராமத்தை ஒட்டியுள்ள பாலாற்றில் மணல் கடத்தலால் ஆற்றில் மிகப்பெரிய பள்ளங்கள் ஆங்காங்கே காணப்படுவதும், ஆற்றில் சில பகுதியில் கெட்டி தன்மையுடைய தரையும் காணப்படுகிறது.
பாலாற்றை சுற்றியுள்ள விவசாய நிலத்தின் கிணறு வற்றி விவசாய நிலங்கள் காய்ந்துள்ளது. மேலும் பயிர் செய்ய முடியாமல் வறண்ட பூமியாக காட்சியளிக்கிறது. தென்னை மரங்களும் பட்டுப்போய் வருகின்றன.
நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திட, விவசாயம் செழிக்க ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story