நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி நேற்று நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்,
நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் சுமார் 1½ லட்சம் பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர் என மொத்தம் 60 ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கும் 6 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.
எனவே நிலுவையில் உள்ள 6 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். நிதி இல்லை என்று காரணம் காட்டி தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்க கூடாது என வலியுறுத்தி நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் பி.எஸ்.என்.எல். எம்ப்ளாயிஸ் யூனியன் மற்றும் தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல். எம்ப்ளாயிஸ் யூனியன் மாவட்ட தலைவர் விஜயன் முன்னிலை வகித்தார். இதில் அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் கோபால், கிளை செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வம் உள்பட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்துக்கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டம் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
Related Tags :
Next Story