தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 July 2019 3:45 AM IST (Updated: 4 July 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் வறட்சி நிவாரண பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் மாதையன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரதாபன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

தர்மபுரி மாவட்டத்தில் தேசியவங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள விவசாயம் சார்ந்த அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நிலங்களுக்கும் 1 ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். வறட்சியால் காய்ந்த தென்னை மரத்திற்கு குறைந்தபட்ச இழப்பீடாக ஒரு மரத்திற்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.

வறட்சியால் பாதிக்கப்பட்டு வேலையிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற்ற தொழிலாளர்களுக்கு தினமும் வேலை வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் எல்லா குக்கிராமங்களுக்கும், வத்தல்மலை, கோட்டூர், ஏரிமலை போன்ற கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கும் வாகனம் மூலம் குடிநீர் வழங்க வேண்டும்.

60 வயதை கடந்த விவசாய கூலி தொழிலாளர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும். வறட்சி நிவாரண பணிகளை கண்காணிக்க விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளடங்கிய கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாய தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story