சிக்பள்ளாப்பூர் அருகே தனியார் பஸ் - ஷேர் ஆட்டோ பயங்கர மோதல்; 11 பேர் உடல் நசுங்கி பலி
சிக்பள்ளாப்பூர் அருகே தனியார் பஸ்சும், ஷேர் ஆட்டோவும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
கோலார் தங்கவயல்,
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவில் உள்ளது, முருகமலை. இங்கிருந்து பெங்களூரு நோக்கி நேற்று மதியம் 12.30 மணியளவில் ஒரு தனியார் பஸ் புறப்பட்டது. அந்த பஸ் சிந்தாமணி டவுன் தியாரலஹள்ளி கேட் அருகே மதியம் 12.45 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரு ‘ஷேர் ஆட்டோ’ வந்தது. அந்த ஆட்டோவில் டிரைவர் உள்பட 13 பேர் பயணம் செய்தனர்.
இந்த நிலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் தாறுமாறாக ஓடியது. பஸ் தறிகெட்டு ஓடி வருவதை பார்த்த ‘ஷேர் ஆட்டோ’ டிரைவர், விபத்தில் சிக்காமல் இருக்க சாலையோரமாக ஆட்டோவை ஓட்டிச்சென்றார். ஆனால் மிகவும் வேகமாக வந்த தனியார் பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக ஷேர் ஆட்டோ மீது மோதியது.
இதில் ஷேர் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணித்து வந்த 3 பெண்கள் உள்பட 11 பேர் உடல் நசுங்கி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்கள் கிருஷ்ணப்பா(45), கலாம் கான், சுரேஷ், வெங்கடரமணப்பா, நாராயணசாமி, திம்மய்யா, சித்திக், தமிழ்நாடு ஓசூரைச் சேர்ந்த குமார், ரெஜினா உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே செத்தனர். பலியானவர்களில் ரெஜினா உள்பட 3 பெண்கள் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2 பேர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இந்த கோர விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கி காயமடைந்திருந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக சிந்தாமணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக கோலார் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த விபத்தில் பஸ் பயணிகள் சிலரும் காயம் அடைந்தனர். அவர்களும் சிகிச்சைக்காக சிந்தாமணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த சபாநாயகர் ரமேஷ் குமார், மாவட்ட கலெக்டர் அனிருத் ஷரவண், மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. சரத் சந்திரா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் பாபு மற்றும் சிந்தாமணி புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் விபத்தில் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி ஐ.ஜி. சரத் சந்திராவும், போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் பாபுவும் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அவர்களது உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோலார் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்துக்கு காரணமான தனியார் பஸ்சின் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து சிந்தாமணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய தனியார் பஸ் டிரைவரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.
தனியார் பஸ் - ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story