குடிநீர் கேட்டு கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 4 July 2019 4:15 AM IST (Updated: 4 July 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி ஊராட்சி உள்ளது. இங்குள்ள மஞ்சுவிடுதி, மேலக்கரை தெரு, மேல மஞ்சுவிடுதி, புலவன்தெரு ஆகிய பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அங்குள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நீர்மட்டம் குறைந்ததால் ஆழ்குழாய் கிணறு செயல்படாத நிலையில் கடந்த சில மாதங்களாக இங்கிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. மேலும் அப்பகுதியில் இருந்த சிறு மின்விசை தொட்டிகளும், 3 மாதங்களுக்கு மேலாக செயல்படாமலேயே உள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

ஊராட்சி அலுவலகம் முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் பிரச்சினையில், அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும், மஞ்சுவிடுதி கிராமத்தை புறக்கணிப்பதாகவும் கூறி கோஷம் எழுப்பினர். மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலர் களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அதிகாரி அமிர்தவள்ளி மற்றும் கறம்பக்குடி போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 3 நாட்களுக்குள் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதை யடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story