விலையில்லா மடிக்கணினி கேட்டு பிளஸ்-2 முன்னாள் மாணவ-மாணவிகள் பள்ளியை முற்றுகை


விலையில்லா மடிக்கணினி கேட்டு பிளஸ்-2 முன்னாள் மாணவ-மாணவிகள் பள்ளியை முற்றுகை
x
தினத்தந்தி 4 July 2019 4:30 AM IST (Updated: 4 July 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவ, மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டனர். பன்னாங்கொம்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வையம்பட்டி,

வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த மடிக்கணினியை ஏழை-எளிய மாணவர்களும் பயன்படுத்தும் நோக்கத்தில் அருமையான ஒரு திட்டத்தை முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா கொண்டு வந்தார். அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்த விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், பள்ளிகளில் பிளஸ்-2 முடித்து தற்போது கல்லூரிகளில் சேர்ந்துள்ள பல மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி இன்னும் வழங்கப்படவில்லை. தற்போது பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மணப்பாறை, மருங்காபுரி ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளிலும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. நேற்று காலை வையம்பட்டியை அடுத்த கருங்குளத்தில் உள்ள அரசு பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவ, மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டு தங்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிட வேண்டும் என்று கூறி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வையம்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்த கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

இதேபோல இளங்காகுறிச்சியில் உள்ள அரசு பள்ளியிலும் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவ, மாணவிகள் தங்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை என்று கூறி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியை முறையாக பதில் கூறாததால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை அனுப்பி வைத்தனர்.

நடுப்பட்டி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் விலையில்லா மடிக்கணினி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவ, மாணவிகள் தங்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி நேற்று காலை மணப்பாறை-துவரங்குறிச்சி சாலையில் அந்த பள்ளியின் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் புத்தாநத்தம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

திருச்சி பொன்மலைப் பட்டியில் உள்ள இருதய மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவ-மாணவிகள் நேற்று காலை அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கல்வி அலுவலர் சின்னராஜ் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். மேலும் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் கல்வித்துறை அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இதுவரை வழங்கப்படாமல் உள்ள மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்றனர். மேலும் பள்ளிக்கு விலையில்லா மடிக்கணினிகள் வந்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதைதொடர்ந்து சமாதானமடைந்த மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் பள்ளி முன்பு நேற்று காலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story