ஏ.சி. வாங்கியதற்கு கார் பரிசு விழுந்து இருப்பதாக கூறி கடற்படை அதிகாரியிடம் செல்போன் மூலம் ரூ.2½ லட்சம் மோசடி


ஏ.சி. வாங்கியதற்கு கார் பரிசு விழுந்து இருப்பதாக கூறி கடற்படை அதிகாரியிடம் செல்போன் மூலம் ரூ.2½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 5 July 2019 3:45 AM IST (Updated: 5 July 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

ஏ.சி. வாங்கியதற்கு கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி கடற்படை அதிகாரியிடம் மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் ரூ.2½ லட்சம் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சை சீனிவாசபுரம் கன்னியா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் இந்திய கடற்படையில் அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் அண்மையில் ஆன்லைன் மூலம் ஏ.சி. வாங்கினார். இதற்கான பணத்தையும் இணையதள வங்கி சேவை மூலம் செலுத்தி உள்ளார்.

இந்த நிலையில் இவருடைய செல்போனுக்கு அவர் வாங்கிய ஏ.சி.க்கு ரூ. 12 லட்சம் மதிப்புள்ள கார், பம்பர் பரிசாக விழுந்திருப்பதாக குறுந்தகவல் வந்தது. மேலும் கார்த்திகேயன் செல்போனுக்கு ஒரு மர்ம நபர் தொடர்பு கொண்டு நீங்கள் ஏ.சி. வாங்கிய கம்பெனியில் இருந்து பேசுகிறேன். உங்களுக்கு பம்பர் பரிசாக கார் விழுந்துள்ளது.

ரூ.2½ லட்சம் மோசடி

இந்த பரிசை பெறுவதற்கு முதலில் ரூ. 2.59 லட்சம் எங்களது வங்கிக் கணக்குக்கு அனுப்ப வேண்டும். நீங்கள் கார் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் அல்லது பணமாக வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறியுள்ளார்.

இதை நம்பிய கார்த்தி கேயன் மர்ம நபர் கூறிய வங்கி கணக்குக்கு இணையவழி மூலம் 3 தவணையாக ரூ.2 லட்சத்து 59 ஆயிரம் செலுத்தி உள்ளார். அதன் பின்னர் அந்த மர்ம நபர் மேலும் ரூ.2 லட்சம் கேட்டுள்ளார். இதனால் கார்த்திகேயனுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தான் வாங்கிய ஏ.சி. நிறுவனத்தை அணுகியுள்ளார். அப்போதுதான், தான் ஏமாற்றப்பட்டதை அவர் அறிந்தார். உடனே மர்ம நபர் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணுக்கு கார்த்திகேயன் தொடர்பு கொண்டார். ஆனால் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

போலீசார் விசாரணை

மர்ம நபர் தன்னை ஏமாற்றியதை அறிந்த கார்த்திகேயன் இதுகுறித்து தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story