கோபியில் கொடிவேரி பாசன விவசாயிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது


கோபியில் கொடிவேரி பாசன விவசாயிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 5 July 2019 4:00 AM IST (Updated: 5 July 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

கோபியில், கொடிவேரி பாசன விவசாயிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது.

கடத்தூர், 

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீருக்கும் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் கொடிவேரி அணையில் தடுக்கப்பட்டு, தடப்பள்ளி, அரக்கன் கோட்டை வாய்க்கால் பாசனத்துக்கு விடப்படுகிறது. இதனால் சுமார் 62 கிலோ மீட்டர் தூரத்திற்கு 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இது தவிர ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு, 75-க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்ட பணிகள் மூலம் நாள் தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பெருந்துறை கூட்டு குடிநீர் திட்டத்திற்காக கொடிவேரி அணையில், தடப்பள்ளி வாய்க்கால் தொடங்கும் பகுதியில் பவானி ஆற்றின் நடுவில் கிணறு அமைத்து அதன் மூலம் 2 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு செல்ல பணிகள் நடைபெற்று வருகின்றன.

தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன பகுதிகள் பாதிக்கப்படும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன் கொடிவேரி அணையையும் முற்றுகையிட்டார்கள்.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 24-ந் தேதி உயர்மட்ட அதிகாரிகள் கொடிவேரி அணை பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இதற்கிடையே கடந்த 30-ந் தேதி பெருந்துறை தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தக் கோரி பொதுமக்களுடன் திரண்டு வந்து கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கலெக்டர் கதிரவன் தலைமையில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் கலெக்டர் கதிரவன் நிருபர்களிடம் கூறும்போது, ‘தற்போது கொடிவேரி அணையில் பெருந்துறை கூட்டு குடிநீர் திட்டம் செயல் படுத்த தேர்வு செய்யப்பட்ட இடம் சரியானது என்று அதிகாரிகள் அறிக்கை கொடுத்துள்ளார்கள்‘ என்றார்.

இதுகுறித்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் தளபதியிடம் கேட்டபோது, ‘பெருந்துறை கூட்டு குடிநீர் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் நோக்கம் இல்லை. கொடிவேரி அணையின் மேல் பகுதியில் தண்ணீர் எடுப்பதற்கு பதிலாக அணையின் கீழ்ப்பகுதியில் தண்ணீர் எடுத்தால் எந்த பிரச்சினையும் இல்லை. இதுகுறித்து பெருந்துறை தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. விடம் பேச்சு வார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம்‘ என்றார்.

ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், ஆர்.டி.ஓ. ஜெயராமன், தாசில்தார் விஜயகுமார் மற்றும் பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பலர் கலந்துகொண்டார்கள்.

Next Story