காஞ்சீபுரத்தில் அத்திவரதர் விழா 4 நாட்களில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்


காஞ்சீபுரத்தில் அத்திவரதர் விழா 4 நாட்களில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 4 July 2019 11:30 PM GMT (Updated: 4 July 2019 7:35 PM GMT)

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் நடந்து வரும் அத்திவரதர் விழாவில் 4 நாட்களில் 2¾ லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.

இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் செய்துள்ளது. 4-வது நாளான நேற்று அத்திவரதர் வெள்ளை நிற பட்டாடையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலையில் இருந்தே வெளியூர், உள்ளூர் பக்தர்கள் இலவச தரிசனத்தில் நீண்ட வரிசையில் அத்திவரதரை வழிபட்டனர்.

வரதராஜபெருமாள் கோவிலில் கோடை உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. 11-ந் தேதி கருடசேவை விழா நடைபெறவுள்ளது. விழாவையொட்டி அத்திவரதரை தரிசனம் செய்யும் நேரம் குறைக்கப்பட்டு உள்ளது. அதன்படி காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை (12 மணி நேரம்) மட்டுமே அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. வருகிற 11-ந் தேதி வரை மாலை 5 மணி வரை மட்டுமே பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க முடியும்.

அத்திவரதர் தரிசனம் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் 1 லட்சம் பக்தர்களும், 2-ந் தேதி 50 ஆயிரம் பேரும், 3-ந் தேதி (நேற்று முன்தினம்) 60 ஆயிரம் பேரும், நேற்று 75 ஆயிரம் பேரும் என கடந்த 4 நாட்களில் மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து உள்ளனர்.


Next Story