செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமல்: குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.500 அபராதம்


செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமல்: குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.500 அபராதம்
x
தினத்தந்தி 4 July 2019 11:11 PM GMT (Updated: 4 July 2019 11:11 PM GMT)

பெங்களூருவில் வசிக்கும் பொதுமக்கள் துப்புரவு தொழிலாளர்களிடம் உலர், உலரா குப்பைகள் என்று தனித்தனியாக தரம் பிரித்து வழங்க வேண்டும். இதை மீறும் பொதுமக்களுக்கு செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறியுள்ளார்.

பெங்களூரு, 

பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூரு நகரில் தினமும் 5,700 டன் குப்பைகள் சேருகிறது. இந்த குப்பைகளை அகற்றுவது மாநகராட்சிக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இதை திறம்பட நிர்வகிக்க மாநகராட்சி சார்பில், புதிய டெண்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக 168 வார்டுகளில் குப்பைகள் அகற்றுவதற்கான டெண்டர் விடப்பட உள்ளது. இந்த டெண்டர் பணிகள் இந்த மாத இறுதிக்குள் நிறைவடையும். கோர்ட்டில் வழக்கு நடைபெறுவதால் மீதமுள்ள 30 வார்டுகளில் டெண்டர் விடப்படவில்லை.

மேலும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் சேரும் குப்பைகளை உலர் குப்பை, உலரா குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து துப்புரவு தொழிலாளர்களிடம் வழங்க வேண்டும். தரம் பிரித்து குப்பைகளை வழங்காவிட்டால் துப்புரவு தொழிலாளர்கள் குப்பைகளை வாங்க மாட்டார்கள். இது டெண்டர் விதிமுறைகளிலேயே உள்ளது.

மேலும் உலர் குப்பை, உலரா குப்பை என்று தரம் பிரிக்காமல் துப்புரவு தொழிலாளர்களிடம் வழங்கும் பொதுமக்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. இது பொதுமக்களுக்கு மட்டும் அல்ல. குப்பைகளை அகற்றும் பணியை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கும் பொருந்தும். அதாவது, குப்பைகளை தரம் பிரிக்காமல் வாங்கினால் ஒப்பந்ததாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இதனால் வீட்டுக்கு வீடு வரும் துப்புரவு தொழிலாளர்களிடம் குப்பைகள் வழங்காமல் இருக்கும் பொதுமக்களையும் கண்காணித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. வாரத்தில் 2 நாட்கள் மட்டும் உலர் குப்பைகளை சேகரிக்க முடிவு செய்யப்பட உள்ளது. மேலும் சாலையோரம் குப்பைகள் வீசுவதை தடுக்க 233 மார்ஷல்கள் நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுதவிர பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவும், மீறுபவர்களிடம் அபராதம் விதிக்கும் முறையை தீவிரமாக செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 15-ந் தேதி முதல் இந்த நடவடிக்கையை முறையாக செயல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. பெங்களூரு நகரில் உள்ள சாலைகளை சுத்தம் செய்யும் வகையில் 17 எந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த எந்திரங்கள் முக்கிய சாலைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story