படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்


படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
x
தினத்தந்தி 6 July 2019 3:45 AM IST (Updated: 6 July 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை, 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது நடப்பு காரீப் பருவத்தில் மக்காச்சோளம் பயிரிட விரும்பும் விவசாயிகள் மக்காச்சோள படைப்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். கோடை மழை பெய்தவுடன் நிலத்தினை ஆழமாக உழவு செய்ய வேண்டும். இதனால் நிலத்தில் உள்ள படைப்புழு மற்றும் இதர புழுக்களின் கூட்டுப்புழுக்கள் மேலே வந்து சூரிய ஒளி படுவதாலும், பறவைகளுக்கு உணவாகவும் அழிக்கப்படுகிறது.

மக்காச்சோளம் விதைப்புக்கு முன் கடைசி உழவில் ஒரு ஹெக்டருக்கு 250 கிலோ வேப்பம்புண்ணாக்கு இட்டு உழ வேண்டும். மக்காச்சோளம் விதைப்புக்கு முன் விதை நேர்த்தி அவசியம். ஒரு கிலோ விதைக்கு ரசாயன மருந்தாக இருந்தால் தையோமித்தாக்சான் 30 எப்.எஸ்.- 10 கிராம் அல்லது உயிரியல் மருந்தாக இருந்தால் பெவேரியா பேசியான -10 கிராம் இதில் ஏதாவது ஒன்றினை கலந்து விதைக்கலாம்.

10 வரிசைக்கு இடையில் 75 சென்டி மீட்டர் இடைவெளி விட்டு விதைப்பு செய்தல் வேண்டும். இதனால் பூச்சி மருந்து தெளித்தல் மற்றும் இதர பணிகள் செய்திட இடையூறு இன்றி எளிதாக இருக்கும். ஒரு ஹெக்டருக்கு சூரிய விளக்குப்பொறி 1 எண் மற்றும் இனக்கவர்ச்சிப் பொறி 12 எண்கள் வைத்து படைப்புழுவின் அந்துப்பூச்சிகளை கண்காணிக்கவும், கவர்ந்து அழிக்கவும் செய்யலாம்.

வரப்புப் பயிராக தட்டைபயறு, எள் மற்றும் சூரியகாந்தி முதலிய பயிர்களையும், ஊடுபயிராக பாசிப்பயறு முதலிய பயிர்களையும் பயிரிடுவதால் மக்காச்சோளத்தில் படைப்புழுவின் தாக்குதலை தவிர்க்கலாம். இளம் பருவ புழுக்களை கட்டுப்படுத்திட அசார்டிரேக்டின் 1 சதவீதம் என்ற வேம்பு மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் 20 மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து குருத்தில் நன்கு படும்படி கைத்தெளிப்பான் மூலம் விதைப்பு செய்த 15-20 நாட்களில் தெளிக்க வேண்டும்.

ரசாயன மருந்தாக இருந்தால் இமாமெக்டின் பென்சோயேட் 1 லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் அல்லது தையோடிகார்ப் 1 லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என கலந்து விதைப்பு செய்த 15 முதல் 20 நாட்களில் ஒரு முறையும், 40-45 நாட்களில் 2-ம் முறையாகவும் கைத்தெளிப்பான் மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம். வளர்ந்த புழுக்களை கட்டுப்படுத்திட உயிரியல் மருந்தான மெட்டாரைசியம் அனிசோபிலே 8 கிராம் அளவினை 1 லிட்டர் நீரில் கலந்து விதைப்பு செய்த 40-45 நாட்களில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு ஒருங்கிணைந்த வழிமுறைகளை கடைபிடித்து மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தி மகசூல் இழப்பினை தவிர்த்திடலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story