அமராவதி அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை சேமிக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை


அமராவதி அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை சேமிக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 5 July 2019 11:45 PM GMT (Updated: 5 July 2019 9:53 PM GMT)

மழைக்காலங்களில் அமராவதி அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தளி,

பருவநிலை மாற்றம் காரணமாக மழைப்பொழிவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகள், குளங்கள், ஏரிகள் அணைகளில் நீர் இருப்பு குறைந்து விட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதுடன் கடும் வறட்சியும் ஏற்பட்டுள்ளது. எனவே வறட்சியைப் போக்கவும், மழைக்காலங்களில் உற்பத்தியாகின்ற உபரிநீரை சேமித்து வைக்கவும் பல்வேறு விதமான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

அவை ஆறுகள், குளங்கள், அணைகள் முறையாக தூர்வாரப்பட வேண்டும். புதிதாக நீர்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பனவாகும். அதுமட்டுமின்றி வீடு மற்றும் வயல்வெளிகளில் மழைநீர் சேகரிப்பை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகளும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

நிலத்தடி நீர் இருப்பை உயர்த்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் நதிநீர் இணைப்பு திட்டம், நுண்ணுயிர் பாசன திட்டம், நீரேற்று பாசனத்திட்டம் உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்த வகையில் நேற்று உடுமலை அடுத்த ஜல்லிக்கட்டில் நீரேற்று பாசன திட்டம் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் இயற்கை விவசாயம், நீர் நிர்வாகம், நீர்மேலாண்மை, விவசாயம் அமைப்பை ஏற்படுத்துதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அப்போது விவசாயிகள் கூறியதாவது:-

அணைகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் முறையாக தூர்வார வேண்டும். மழைக்காலங்களில் அமராவதி அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை சேமிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். நிலத்தடி நீரை சேமிப்பதற்கு புதிதாக குளம், குட்டைகளை அமைப்பதுடன் ஏற்கனவே உள்ள குளங்களுக்கு நீரை பங்கீடு செய்து தருவதற்கு முன்வர வேண்டும்.

மேலும் ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை வேளாண்மைக்கு மாறுவதுடன் பயிர்களுக்கு ஏற்றவாறு தண்ணீர் வினியோகத்தை கடைபிடித்தால் கூடுதல் விளைச்சலை அடைய முடியும்.

இயற்கை விவசாயத்தால் மண்வளம் பெருகுவதுடன் விவசாய தொழில் ஊக்குவிக்கப்பட்டு புதிதாக வேலை வாய்ப்புகள் ஏற்படும். அத்துடன் பாலாறு, கூட்டாறு, பாம்பாறு இணைப்புத்திட்டம் குறித்தும், திருமூர்த்தி அணையில் காண்டூர் கால்வாயை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சமமட்ட கால்வாயாக நீடித்து அதன் மூலமாக பாசனம் பெறாத நிலங்களுக்கு நீரை வழங்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story