பெங்களூருவில் பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை முகாம் - இன்று தொடங்குகிறது


பெங்களூருவில் பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை முகாம் - இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 6 July 2019 3:55 AM IST (Updated: 6 July 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இன்று (சனிக்கிழமை) பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடங்குகிறது.

பெங்களூரு,

இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் என்.ரவிக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை முகாம் நாளை (அதாவது இன்று) தொடங்குகிறது. இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் 5 லட்சம் தொண்டர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். வருகிற 23-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கட்சி நிர்வாகிகள் 15 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபட உள்ளனர்.

வருகிற ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வரை இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் நடக்கிறது. புதிதாக 25 உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு ஈடுபாட்டுடன் செயல்படும் உறுப்பினர் என்ற அங்கீகாரம் வழங்கப்படும். மாநிலத்தில் ஈடுபாட்டுடன் செயல்படும் 2 லட்சம் உறுப்பினர்களை உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

எடியூரப்பா

நாங்கள் வெளியிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு ‘மிஸ்டு கால்‘ கொடுத்தும் உறுப்பினராக முடியும். இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடக்க விழா பெங்களூரு ஜெயநகரில் உள்ள வணிக வளாகத்தில் நடக்கிறது. இதில் வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளிதரன், கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைக்கிறார்கள்.

மைசூருவில் மத்திய மந்திரி சதானந்தகவுடா, பல்லாரியில் ஈசுவரப்பா எம்.எல்.ஏ., ஹாசனில் மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் கோடா சீனிவாச பூஜாரி, சிக்கமகளூருவில் ஷோபா எம்.பி., துமகூருவில் சோமண்ணா எம்.எல்.ஏ. ஆகியோர் உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைக்கிறார்கள்.

அமித்ஷா

பிரதமர் மோடி வாரணாசியிலும், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தெலுங்கானா மாநிலத்திலும் இந்த முகாமை தொடங்கி வைக்கிறார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த விஷயத்தில் சித்தராமையா பா.ஜனதா தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். அவர் தனது கட்சியில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு என்.ரவிக்குமார் கூறினார்.


Next Story