கொல்லங்கோடு அருகே, இளம்பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு - வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


கொல்லங்கோடு அருகே, இளம்பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு - வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 6 July 2019 4:45 AM IST (Updated: 6 July 2019 4:46 AM IST)
t-max-icont-min-icon

கொல்லங்கோடு அருகே இளம்பெண்ணிடம் 9 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

கொல்லங்கோடு,

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமாநகர் அம்பானவிளை பகுதியை சேர்ந்தவர் சேம்ராஜ், கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஷைதா (வயது 29). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் மேக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். நேற்று மதியம் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஷைதா நடந்து சென்று கொண்டிருந்தார்.

கொக்கோட்டு மூலை பகுதியில் சென்ற போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஷைதாவை கடந்து சென்றனர். பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளை திருப்பியபடி ஷைதாவை நோக்கி சென்றனர். அப்போது, மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த வாலிபர் இறங்கி ஷைதாவின் கழுத்தில் அணிந்திருந்த நகையை திடீரென பறித்தார். சுதாரித்துக் கொண்ட ஷைதா, நகையை பிடித்துக் கொண்டு அந்த வாலிபரிடம் போராடினார். அப்போது, 9 பவுன் நகை அறுந்து வாலிபர் கையிலும், அதன் டாலர் மட்டும் ஷைதாவின் கையிலும் சிக்கியது. உடனே வாலிபர் அங்கு தயாராக நின்ற கூட்டாளியுடன் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

பின்னர், இதுகுறித்து ஷைதா கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், மோட்டார் சைக்கிளில் வந்து நகைப்பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த கேமரா பதிவுகளை வைத்து போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம வாலிபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story