ஏரி, குளங்களை தூர்வார கோரி, திருச்சி பொதுப்பணித்துறை அதிகாரி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


ஏரி, குளங்களை தூர்வார கோரி, திருச்சி பொதுப்பணித்துறை அதிகாரி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 6 July 2019 4:15 AM IST (Updated: 6 July 2019 4:46 AM IST)
t-max-icont-min-icon

ஏரி, குளங்களை தூர்வார கோரி பொதுப்பணித்துறை அதிகாரி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அடுத்த கட்டமாக முதல்-அமைச்சர் வீடு முன்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

திருச்சி,

ஏரி, குளங்களை தூர்வார கோரி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி கோர்ட்டு அருகே பொதுப்பணித்துறை ஆற்றுப்பாசன கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் பூ.விசுவநாதன் தலைமை தாங்கினார்.

சம்பா சாகுபடி செய்ய கடைமடை வரை காவிரி தண்ணீர் கிடைக்க பெருவளை வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால், வடக்கு, தெற்கு அய்யன் வாய்க்கால், உய்யக்கொண்டான் வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால் மற்றும் ஆற்றுப்பாசன கோட்டத்திற்குட்பட்ட அனைத்து ஏரி, குளங்கள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் செயற்பொறியாளர் பாஸ்கரை விவசாயிகள் சந்தித்து கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர். மனுவை பெற்ற அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். முன்னதாக விசுவநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், “தமிழகம் முழுவதும் ஏரி, குளங்களை தூர்வார ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி ஆற்றுப்பாசன கோட்டத்திற்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக பயன்படுத்தி மழை காலத்திற்கு முன்பாக ஏரி, குளம், வாய்க்கால்களை தூர்வார வேண்டும். கடைமடை வரை தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும். கடந்த முறை ஏரி, குளங்களை தூர்வார நிதி ஒதுக்கப்பட்டது வீணாகி போனது. அது போல இந்த முறையும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏரி, குளம், வாய்க்கால்களை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக முதல்-அமைச்சர் வீடு முன்பு நெற்றியில் பட்டையுடன் அரை நிர்வாண போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

Next Story