நாகர்கோவிலில் இரவில் வீடு புகுந்து துணிகரம்: பெண்ணை கத்தியால் குத்தி 5 பவுன் நகை பறிப்பு


நாகர்கோவிலில் இரவில் வீடு புகுந்து துணிகரம்: பெண்ணை கத்தியால் குத்தி 5 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 7 July 2019 4:45 AM IST (Updated: 7 July 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் இரவில் வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்தி 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் மேலராமன்புதூரை சேர்ந்தவர் ஜெலஷ்டின் சுபாஷ், கேரளாவில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தங்கராணி (வயது 39). இவர்களுக்கு ராஜேஷ் என்ற மகனும், ஹரிதா என்ற மகளும் உள்ளனர். ஜெலஷ்டின் சுபாஷ் வேலை காரணமாக கேரளாவில் தங்கி உள்ளார். அவ்வப்போது மட்டும் வீட்டுக்கு வந்து செல்வார். தங்கராணி தன் குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தங்கராணி மற்றும் குழந்தைகள் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். காலையில் குழந்தைகள் எழுந்து தாயாரைதேடியபோது வீட்டின் ஒரு பகுதியில் தங்கராணி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அவரது உடலில் கத்தி குத்து காயங்கள் இருந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் பக்கத்து வீட்டில் தகவல் சொன்னார்கள்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தங்கராணி முதலில் மயக்க நிலையில் இருந்ததால் போலீசாருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்து.

சிறிது நேரம் கழித்து அவருக்கு மயக்கம் தெளிந்தது. பின்னர் நேசமணிநகர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கிடைத்த திடுக்கிடும் தகவல்கள் விவரம் வருமாறு:-

தங்கராணியின் வீட்டுக்குள் இரவில் யாரோ மர்ம நபர் புகுந்துள்ளார். அவர், தூங்கி கொண்டிருந்த தங்கராணியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறிக்க முயன்றுள்ளார். திடுக்கிட்டு விழித்த தங்கராணி தனது நகையை காப்பாற்றிக் கொள்ள போராடி உள்ளார்.

அப்போது அந்த நபர் திடீரென கத்தியால் தங்கராணியை குத்திவிட்டு நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். கத்திக்குத்து விழுந்ததில் அவருக்கு நிறைய ரத்தம் வெளியேறியதால் மயக்கம் அடைந்துவிட்டார். இதன் காரணமாக கத்தியால் தங்கராணி குத்துபட்ட சம்பவம் யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு கூட நடந்த சம்பவம் தெரியவில்லை.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தங்கராணியை நாகர்கோவில் போலீஸ் உதவி சூப்பிரண்டு ஜவகர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இரவில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணை கத்தியால் குத்தி 5 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மர்ம நபரை பிடிக்க போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். மர்ம நபர் உள்ளூர் வாசியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடக்கிறது.

Next Story