தற்காலிக ஆட்சிதான் நடக்கிறது தமிழ்நாட்டில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பேட்டி


தற்காலிக ஆட்சிதான் நடக்கிறது தமிழ்நாட்டில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பேட்டி
x
தினத்தந்தி 7 July 2019 3:45 AM IST (Updated: 7 July 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று வேலூரில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. கூறினார்.

வேலூர், 

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ., ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில், அவைத்தலைவர் தி.அ.முகமதுசமி, வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த், எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, வில்வநாதன், காத்தவராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மாநில இளைஞரணி அமைப்பாளராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பது, வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்தின் வெற்றிக்கு பாடுபட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது, நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை விரைவில் நடத்த வலியுறுத்துவது, உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தும் அ.தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து, விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத்தொடர்ந்து தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்களால் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நின்றுபோனது என்று கூறுவது சரியல்ல. எங்கள் மீது எந்த தவறும் இல்லை. எங்கள் வீட்டிலும், கல்லூரியிலும் சோதனையிட்டு, எதுவும் பிடிபடவில்லை என்று வருமான வரித்துறையினர் எழுதி கொடுத்து சென்றனர். எங்களுக்கும், வரிமான வரித்துறையினருக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை. தமிழ்நாட்டில் தற்காலிகமான ஆட்சிதான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

தமிழ்நாட்டில் குடிநீர் பிரச்சினை, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, லஞ்ச லாவண்யம் அதிகமாக உள்ளது. இவற்றை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம். தமிழகத்தில் எந்த தொழில் முன்னேற்றமும் ஏற்படவில்லை. பெரிய தொழில் நிறுவனங்கள் ஆந்திராவுக்கு சென்று விட்டன.

மத்திய பட்ஜெட் குறித்து நன்கு படித்த அறிஞர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்பட அனைவரும் மத்திய பட்ஜெட்டால் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவுவது போன்றுதான் உள்ளது பட்ஜெட். பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் கொடுப்பதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். அவர்கள் சொல்வதை எல்லாம் செய்து விடுவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தி.மு.க. சார்பில் போட்டியிடும் எனது மகன் கதிர்ஆனந்த் வருகிற 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story