கூட்டணி ஆட்சி மீதான அதிருப்தியால் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா - எச்.விஸ்வநாத் பரபரப்பு பேட்டி


கூட்டணி ஆட்சி மீதான அதிருப்தியால் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா - எச்.விஸ்வநாத் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 7 July 2019 4:47 AM IST (Updated: 7 July 2019 4:47 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரைக்கு பலியாகவில்லை என்றும், கூட்டணி ஆட்சி மீதான அதிருப்தியால் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பதாகவும் எச்.விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் அதிருப்தியில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். இதில் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ராமலிங்கரெட்டியும் ஒருவர் ஆவார். அதுபோல, ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்திருந்த மற்றொரு மூத்த தலைவர் எச்.விஸ்வநாத்தும் ஆவார். எச்.விஸ்வநாத் தலைமையிலேயே 2 கட்சிகளின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் சபாநாயகர் அலுவலகத்திற்கு சென்று ராஜினாமா கடிதம் கொடுத்திருந்தனர்.

அதுபோல, கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் வஜூபாய் வாலாவையும் எச்.விஸ்வநாத் தலைமையிலேயே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசி இருந்தனர். பின்னர் கவர்னரை சந்தித்துவிட்டு வெளியே வந்த எச்.விஸ்வநாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அமைந்தது பல எம்.எல்.ஏ.க்களுக்கு பிடிக்கவில்லை. இந்த கூட்டணி அரசு மீது அதிருப்தியில் இருந்த 14 எம்.எல்.ஏ.க்கள் ஒட்டு மொத்தமாக தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளோம். அந்த 14 பேரில் ஆனந்த்சிங் எம்.எல்.ஏ.வும் அடங்குவார். எங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அலுவலக செயலாளரிடம் கொடுத்துள்ளோம். எங்கள் ராஜினாமா கடிதம் கிடைத்திருப்பதை சபாநாயகரும் உறுதி செய்துள்ளார். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பது குறித்து கவர்னர் வஜூபாய் வாலாவின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம்.

எங்களது ராஜினாமா கடிதத்தை உடனடியாக சபாநாயகர் அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அவரும் 9-ந் தேதி ஆலோசித்து சட்டப்படி முடிவு எடுப்பதாக அறிவித்துள்ளார். சபாநாயகர் ரமேஷ்குமார் எங்களது ராஜினாமாவை அங்கீகரிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் எங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது.

கூட்டணி ஆட்சியில் எந்த விதமான வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. இந்த கூட்டணி அரசு முழுமையாக தோல்வி அடைந்து விட்டது. முதல்-மந்திரி குமாரசாமி, எம்.எல்.ஏ.க்களின் கருத்தை காது கொடுத்து கேட்பதில்லை. எம்.எல்.ஏ.க்கள் கூறும் பிரச்சினைகளை தீர்க்கவும் முதல்-மந்திரி குமாரசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொகுதிகளுக்கு தேவையான நிதியையும் ஒதுக்கவில்லை. இதனால் முதல்-மந்திரி மீது எம்.எல்.ஏ.க்களுக்கு அதிருப்தி உண்டானது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கூட்டணி அரசு தவறி விட்டது. மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்ய கூட்டணி அரசு முன்வரவில்லை.

கூட்டணி ஆட்சியில் கல்வி செத்து போய் விட்டது. 2 கட்சிகளை சேர்ந்தவர்களையும் ஒருங்கிணைந்து செல்ல தலைவர்கள் தவறி விட்டனர். இதுபோன்ற காரணங்களால் அதிருப்தி அடைந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருக்கிறோம். எங்களது ராஜினாமாவுக்கு பின்னால் பா.ஜனதா தலைவர்கள் யாரும் இல்லை. பா.ஜனதா கட்சியில் சேருவது குறித்தும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இது எங்களது சொந்த முடிவு ஆகும். பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரைக்கு எந்த எம்.எல்.ஏ.க்களும் பலியாகவில்லை. எங்களது அதிருப்திக்கு கூட்டணி அரசு தான் காரணம். அரசை வழி நடத்துவது யார்?, முதல்-மந்திரி குமாரசாமி தானே. அவரே காரணம். இவ்வாறு எச்.விஸ்வநாத் கூறினார்.


Next Story