உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 7 July 2019 5:38 AM GMT (Updated: 7 July 2019 5:38 AM GMT)

அவர் உயர்பதவி வகிப்பவர். சமூக செல்வாக்கும் கொண்டவர். அவரது நடை, உடை எல்லாமுமே மற்றவர்களை வசீகரிக்கும் விதத்தில் இருக்கும். பேச்சில் வல்லமை கொண்டவர். பேசிப் பேசியே தான் நினைப்பதை சாதிக்கும் ஆற்றலையும் பெற்றிருந்தார்.

அவரது மனைவி அதிகம் படிக்காதவர். பகட்டும், பளபளப்பும் பிடிக்காதவர். அவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். கணவரையும், குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு குடும்பத்துக்குள்ளே அவர் தன்னை சுருக்கிக்கொண்டார். கணவர் ரொம்ப கட்டாயப்படுத்தி அழைத்தால் மட்டும் எப்போதாவது அவரோடு வெளி நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவார்.

நடுத்தர வயதிலும் நரைமுடி ஒன்றுகூட வெளியே தெரியாத அளவுக்கு எப்போதும் ‘மேக்அப்’ போட்டுக்கொண்டு, இளைஞர் போன்று உலாவரும் அவருக்கு, மனைவி தன் அழகுக்கு பொருத்தமான ஜோடியாக இல்லை என்ற மனக்குறை உண்டு. அதை மனைவியிடம் வெளிப்படுத்தியதும், அந்த பெண்மணி கணவருடன் வெளியே செல்வதை அடியோடு நிறுத்திவிட்டார்.

மகன்கள் இருவருக்கும் இடையே ஒரு வயதுதான் வித்தியாசம். இருவரும் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர் செல்வாக்கு மிகுந்த பதவியில் இருப்பதால், அவரது அனுமதியோடுதான் பல்வேறு ஒப்பந்தங்களும், பணிகளும் நடைபெறும். ஒவ்வொரு வேலைக்கும் அவர் பெருந்தொகையை கையூட்டாக பெறுவார். அதனை வீட்டில்வைத்தே வாங்குவார். மனைவி அதை கண்டுகொள்ளவேமாட்டார். குறுக்குவழியில் அவர் பெற்றுவந்த பணத்தை மனைவி தொட்டுகூட பார்க்க விரும்பவில்லை. ஆனாலும் அந்த பணத்தால் ஏதாவது விபரீதம் நடந்துவிடுமே என்ற அச்ச உணர்வு அவரிடம் இருந்துகொண்டே இருந்ததால், மகன்களை சிக்கனமான வாழ்க்கைக்கு பழக்கவேண்டும் என்று விரும்பினார். கல்லூரிக்கு சென்றுகொண்டிருக்கும் அவர்களுக்கு தேவைக்கு மட்டும் பணம் வழங்கிக்கொண்டிருந்தார்.

ஆனால் தந்தையோ தன்னிடம் பணம் நிரம்பி வழிந்ததால், மகன்களை ஆடம்பரமாக செலவழிக்க தூண்டினார். ‘ஆடம்பரத்தின் மூலம் மற்றவர்களை எளிதாக கவரலாம்’ என்றும், மகன்களிடம் உபதேசம் செய்தார். விலை உயர்ந்த கார்களில் அவர்கள் பவனிவந்தார்கள். நண்பர்கள் வட்டத்தோடு சேர்ந்து அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் சென்றுவந்தார்கள். பணத்தை கண்டபடி செலவுசெய்த அவர்கள் அதை தங்கள் தாயாருக்கு தெரியாத விதத்திலும் பார்த்துக்கொண்டார்கள்.

இந்த நிலையில் அவர் அதிகமாக கையூட்டு வாங்கிக்கொண்டிருப்பது உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால், முக்கியமான பொறுப்புகள் சிலவற்றை அவரிடமிருந்து பறித்தார்கள். அதனால் அவருக்கு ‘கூடுதல்’ வருமானம் வருவது நின்றுபோய்விட்டது. நாலாபுறமும் இஷ்டத்துக்கு செலவு செய்துகொண்டிருந்ததை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தார். அப்போதுதான் மகன்கள் பெருமளவு பணம் வாங்கிக்கொண்டிருப்பதை அவர் கவனத்தில்கொண்டார். மகன்களுக்கு அள்ளிக்கொடுத்துக்கொண்டிருப்பதை குறைத்து, கிள்ளிக்கொடுக்கத் தொடங்கினார்.

மகன்களின் செலவுக்கு கொடுத்த பணத்தில் கைவைத்ததும், அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பணத்தை அள்ளி வீசிய மகன்கள் தேவையற்ற பழக்கங்களில் எல்லாம் ஈடுபட்டிருந்தார்கள். அண்ணனும், தம்பி யும் சேர்ந்தே மிகப்பெரிய தோழிகள் வட்டத்தை உருவாக்கிவைத்திருந்தார்கள். இவர் களது செலவிலே அவர்களை வெளிநாடு களுக்கு அழைத்துச்செல்வது, போதைப் பொருள் பழக்கத்தில் ஈடுபடுவது என தனி ராஜாங்கமே நடத்திவந்திருக்கிறார்கள்.

இவர் பணம் கொடுப்பதை குறைத்ததும், மகன்கள் சுயரூபத்தை காட்டத் தொடங்கினார்கள். தாங்கள் பழகியிருக்கும் சில பழக்கங்களில் இருந்து உடனடியாக விடுபட முடியாது என்றும், அதில் இருந்து படிப்படியாகவே விடுபடமுடியும் என்றும், அதுவரை பணம் வழங்கிக்கொண்டிருக்கவேண்டும் என்றும் இருவரும் சேர்ந்தே தந்தையிடம் நிபந்தனைவிதித்து, தகராறு செய்தார்கள்.

தான் தவறானமுறையில் சம்பாதித்த பணத் தால் தனது மகன்கள் வழிதவறிப் போயிருக்கிறார்களே என்பதை உணர்ந்து நொந்துபோன அவர், மகன்களை திருத்தியே ஆகவேண்டும் என்று முடிவுசெய்தபோது, அவரை நோக்கி மகன்கள் விபரீதமான அம்பை வீசினார்கள்.

‘நீங்கள் இதுவரை யார்யாரிடமிருந்து எத்தனை லட்சங்கள் கையூட்டாக வாங்கினீர்கள் என்பதும், அதை எங்கெல்லாம் சேர்த்துவைத்திருக்கிறீர்கள் என்பதும், அதன் மூலம் நீங்கள் பராமரித்துக்கொண்டிருக்கும் தவறான தொடர்புகளும் எங்களுக்குத் தெரியும். நீங்கள் எங்களுக்கு பணம் தருவதை நிறுத்திவிட்டால் அனைத்து விஷயங்களையும் போடவேண்டிய இடத்தில் ‘போட்டுக் கொடுத்து விடுவோம்’ என்று போதை வெறியில் மிரட்டினார்கள்.

அப்பாவுக்கும், மகன்களுக்கும் நடந்த உரையாடலை கேட்டு கண்ணீர்விட்ட தாயார் ‘குடும்பத்தின் ஈரலும் கெட்டுப்போய்விட்டது. இதயமும் கெட்டுப்போய்விட்டது. இனி இந்த குடும்பத்தை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்’ என்று கூறிக்கொண்டு, தலையில் அடித்த படி தாய்வீட்டிற்கு கிளம்பிச் சென்றுவிட்டார்.

- உஷாரு வரும்.

Next Story