ஆண்டிப்பட்டி பகுதியில், விவசாயத்திற்கு விலை கொடுத்து தண்ணீர் பாய்ச்சும் அவலம்
ஆண்டிப்பட்டி பகுதியில் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்ததால் விவசாயத்திற்கு விலை கொடுத்து வாங்கி தண்ணீர் பாய்ச்சும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கண்டமனூர்,
ஆண்டிப்பட்டி ஒன்றியம் 30 ஊராட்சிகளை கொண்டுள்ளது. கடந்த ஓராண்டாக மழை இல்லாமல் இப்பகுதியில் உள்ள ஆறு, குளம், கிணறு, கண்மாய்கள் வறண்டு போய் விவசாயம் கேள்விக்குறி ஆனது. கடுமையான வறட்சி நிலவியதால் கால்நடைகளுக்கு தீவனம் இல்லாமலும், வேறு தொழில் தெரியாமலும் விவசாயிகள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில் கிணற்றில் இருந்த குறைந்த தண்ணீரை நம்பி, தக்காளி, வெங்காயம், பீன்ஸ், அவரை ஆகிய காய்கறிகளையும், செவ்வந்தி, மல்லிகைப்பூ ஆகியவற்றை சாகுபடி செய்திருந்தனர். தற்போது போதிய மழை இல்லாததால், கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தது. இதனால் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள எரதிம்மக்காள்பட்டி பகுதியில் சாகுபடி செய்த பயிர்களை காப்பாற்ற வேறு பகுதிகளில் இருந்து டிராக்டர் டேங்கரில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி விவசாயிகள் பாய்ச்சி வருகின்றனர். இதனால் உற்பத்தி செலவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, வரும் காலங்களில் மழை நீரை சேமிக்கும் பொருட்டு ஆறு, குளம், கண்மாய்களை தூர்வாரி, கரையை பலப்படுத்தி செம்மைப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் முல்லைப்பெரியாற்றிலிருந்து குழாய்கள் மூலம் ஆண்டிப்பட்டி பகுதிக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story